April

April

“கசிப்பு காய்ச்சுபவர்களும், மண் கடத்துபவர்களுமே எமக்கு காசு தருகிறார்கள்” – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் இன்னுமொரு பக்கம் !

“கிளிநொச்சியில் இடம்பெறும் பாரிய வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் இருக்கிறார்கள்” என சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன சந்திரகுமார் அவர்களுடன் அண்மையில் தேசம் திரை ஊடாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது ” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் தொடர்பு தமிழ் தேசியக் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழரசு கட்சி தன்னுடைய எதிர்ப்பை இதுவரை வெளியிடவில்லை என சந்திரகுமார் அவர்கள் விசனம் வெளியிட்டிருந்தார்.
 இதன் போது கேள்வி எழுப்பிய தேசம் ஜெயபாலன் அவர்கள் தனித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பற்றி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் அன்றாடம் இடம் பெற்றுக் கொண்டிருக்க கூடிய “போதைப் பொருள் பாவனை, அதிகரிக்கும் சிறுவயது திருமணங்கள், சமூக சீர்கேடுகள் இவை தொடர்பில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் எந்த கட்சிகளும் மறந்தும் வாய் திறப்பதில்லையே ஏன்  என கேட்ட போது.
பதில் அளித்த சந்திரகுமார் அவர்கள்
 “சமூக கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்க கூடிய அளவுக்கு தமிழரசு கட்சியினுடைய அங்கத்தவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என குறிப்பிட்டார். மேலும் சமூக மாற்றத்திற்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தென் இலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது நாம் வாழும் வடக்கு – கிழக்கு இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் சமூக வன்முறைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. வட இலங்கையில் கையை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம் , காலை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம்,  பெட்ரோல் குண்டு வீசுவதற்கு ஒரு தொகை பணம் என எங்களுடைய பகுதிகளில் பல வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட – கிழக்கு இலங்கையில் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்புற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இதுவே சமூக பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள்,  கிளிநொச்சியின் பளை பிரதேசத்தில் ஒரு வசதி குறைந்த குடும்பம் ஒரு காணியில் வசிக்கிறது. அவுதிரேலியாவில் இருக்கக்கூடிய ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அந்தக் காணியை அபகரிக்கும் நோக்குடன் ஒரு வன்முறை கும்பலை இறக்கி அந்த ஏழை குடும்பத்தின் குடிசை வீட்டை எரித்ததுடன் – விசுவமடு பகுதியிலிருந்து வன்முறை கும்பலை இறக்கி அவர்களை தாக்கியுள்ளார். பின்பு மேலதிக விசாரணைகளின் போது அந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கக்கூடிய நபரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த ஏழை குடும்பம் தொடர்பில் யாரும் கணக்கெடுக்கவில்லை. இதுபோல வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களால் இங்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஆபத்தான ஒரு நிலை எங்களுடைய வடக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குடும்பப் பகைமை காணிப்பிரச்சனை இவற்றை தீர்ப்பதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த வன்முறை கும்பலை பயன்படுத்துகிறார்கள்.
கிளிநொச்சியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவை தொடர்பு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தொடர்பு பிரச்சனைகள் இடம்பெறக்கூடிய பகுதி மக்களிடம் தொடர்பு கொண்ட போது அவர் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மட்டுமே வருடத்திற்கு ஒரு தடவை அங்கு பயணம் செய்வதாக மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையிலும் மக்கள் அமைப்பினுடைய தலைவர் என்ற வகையிலும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்..? என தேசம் ஜெயபாலன் வினவிய போது..
இந்தப் பிரச்சனையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்தாலும் கூட அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களிடமே போலீசார் யார் இது தொடர்பில் தகவல் கொடுத்தவர்கள் என்பதையும் தெரிவித்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் சிறையில் இருந்து வெளியேறியதும் தகவல் கொடுத்தவர்கள் மீது தங்களுடைய வன்முறைத்தனத்தை காட்டுகின்றனர்  இது நிறுத்தப்பட வேண்டும். இதனால்தான் சமூகத்தில் மிகப்பெரிய வன்முறை சீர்கேடுகள் உருவாகி கொண்டிருக்கின்றன.
மிகக் கவலையுடன் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த வன்முறையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான விடயம். கிளிநொச்சி மாவட்டத்தில் மண் கடத்தலாக இருக்கலாம் அல்லது போதைப் பொருள் விற்பனையாக இருக்கலாம் கசிப்பு காச்சுவதாக இருக்கலாம் இவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் முக்கியமான அரசியல் கட்சிகளின் மத்திய உறுப்பினர்களாக இருப்பதனால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. குறிப்பாக தமிழரசு கட்சியினுடைய பல அமைப்பாளர்கள் கிளிநொச்சியில் இடம் பெறக்கூடிய சமூக வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பில் கிளிநொச்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களிடம் அவருடைய கட்சியின் நேர்மையான உறுப்பினர் ஒருவர் சென்று இவ்வாறான சமூக பிரச்சினைகளின் பின்னணியில் உங்களுடைய கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறிய போது பதில் அளித்த சிவஞானம் ஸ்ரீதரன் “இவர்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் காலங்களில் இவர்கள்தான் அதிகமாக செலவழிக்கிறார்கள்.” எனக் கூறியிருக்கிறார். எனவே இந்த அரசியலும் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று பிண்ணிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்வது. தமிழரசு கட்சிக்கும் கிளிநொச்சியில் நடைபெறக்கூடிய வன்முறை சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது  என்பது தொடர்பில் என்னிடம் நிறைவான ஆதாரங்கள் உள்ளன.
திருவையாறு அமைப்பாளர் ஒருவர் இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு சென்றுள்ளார். பின்பு நாங்கள் சுற்றுச்சூழல் அமைப்பிடம் பேசி பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கிளிநொச்சி செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரக்கூடிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் எங்களுடைய தேசம் திரை மூலமாக ஒரு ஆவணக் காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாம் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது மேலே கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கூறியது போல இந்த சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தொடர்பில் விளங்குவதற்காக அவருடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அவரை தொடர்பு கொண்டோம். இதன் போதும் பல தடவைகள் அவருக்கு அழைப்பை மேற்கொண்டு இறுதியாக ஒரே ஒரு தடவை அவர் எங்களுடன் பேசினார். அப்போது கூட நான் கோயில் திருவிழா ஒன்றில் நிற்கிறேன். பிறகு போல பேசுகிறேன் எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்பும் பல தடவைகள் தேசம் இணையதளத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் எந்த பதிலுமே எங்களுக்கு அளிக்கவில்லை.
இவ்வளவுதான் கிளிநொச்சி மக்கள் அதிக வாக்குகள் கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் மக்கள் பற்று.
மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.  பாராளுமன்றத்தில் மட்டும் தமிழ் தேசியம் , தலைவர் பிரபாகரன்,  வீரவணக்கம் , நினைவஞ்சலி என முழக்கமிட்டு விட்டு தனிப்பட்ட ரீதியில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோ நிலையிலேயே ஸ்ரீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற பல அரசியல் தலைவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் தேசியம் பேசிப்பேசி தமிழர்கள் கண்டது ஒன்றுமில்லை என்பதை இறுதி.
எனவே மக்கள் தமக்காக இயங்காத ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் அடுத்தடுத்து வரக்கூடிய ஜனநாயக தேர்தல்களில் புறக்கணித்து தங்களுக்காக பணியாற்ற கூடிய தலைவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இந்த தமிழ் சமுதாயம் முன்னோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.
மேற்குறித்த காணொளியை காண்பதற்கு..;
https://youtu.be/T_3QDT5Tb8g

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்சொட்டு மருந்துகளை பயன்படுத்தாதீர்கள்- சுகாதார அமைச்சு அறிவிப்பு !

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று நோயாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளும் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அடிப்படையில், கண் வைத்தியசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்ச்சைக்குள்ளான கண் மருந்தை பயன்படுத்துவது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் Prednisolone-ஐ பயன்படுத்திய ஒருவருக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுவரெலியா வைத்தியசாலையிலும் இந்த மருந்து பயன்பாட்டின் பின்னர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெற்காசியாவில் மட்டுமே 290 மில்லியன் சிறுவர் மணமகள்கள் !

உலகளாவிய ரீதியாக தெற்காசியாவிலே அதிக சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக அதிகரித்த நிதி நெருக்கடிகள் மற்றும் பாடசாலை மூடல்களால் இளம் வயது பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய பெற்றோர்களால் நிர்ப்பத்திக்கபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் 290 மில்லியன் சிறார்கள் மணமகள்களாக உள்ளதாக புதிய கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகின்றது.

அது உலக சனத்தொகையில் 45 வீதம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக சிறுவர் திருமணம் தெற்காசியாவில் உள்ளமை கவலைக்குரியது’ என்று யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் நோலா ஸ்கின்னர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது நேபாளத்தில் 20 ஆகவும், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் 18 ஆகவும் உள்ளது.

அதேநேரம், ஆப்கானிஸ்தானில் சட்டபூர்வமான திருமண வயது 16 ஆகவும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆகவும் உள்ளது.

திருமண செலவுகளை குறைப்பதற்காக, கொவிட் தொற்று பரவல் காலப்பகுதியில் பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைத்துள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 156 ஆண்டுகள் சிறை !

அமெரிக்காவில் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபரொருவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாரெல் குட்லோ என்பவர் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது.

இந்த வழக்குகள் இண்டியானா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

குரங்குகள் வேண்டாம் என சீனா அறிவிப்பு – சீனாவுக்கு அனுப்ப ஒரு குரங்கிற்கு 25000 ரூபா என விவசாய அமைச்சர் தெரிவிப்பு !

ஒரு குரங்கினை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவழிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் இருந்து எங்களிடம் வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.

இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதிகமாக வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1000 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.

ஸ்டெர்லைசேஷன் திட்டப்பணிகள் செய்யப்பட்டு அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.

சில மேற்கத்திய நாடுகள் மான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மானை கொல்ல கால அவகாசம் கொடுக்கின்றன. மற்றும் இறைச்சிக்காக விற்கவும். திமிங்கலங்கள் கொல்லப்பட்டு விற்கப்படுகின்றன. கங்காருக்கள் வளரும்போது கொல்லப்படுகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட நாளை மறுநாள் வரை தங்கள் வீடுகளில் இருக்க முடியாது. ஓரிரு நாள் குரங்குக்கு சாப்பாடு கொடுத்த பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொல்வோம். அப்போதுதான் புரியும்.

அவர்கள் உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளுக்கு அட்வான்ஸ் தர அனுமதி கேட்டார்கள். ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது.

இந்த மறுபரிசீலனைப் பணத்தை பறிமுதல் செய்யச் சொன்னார்கள். நான் பார்க்கிறபடி, ஒரு குரங்கை பிடிப்பதற்கு 20,000 முதல் 25,000 ரூபாய் அந்த ஆட்கள் செலவழிக்க வேண்டும்.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே சொன்னார்கள். விலங்குகளை சேதப்படுத்தக்கூடாது.

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டார்கள். ஒரு குரங்கை இறைச்சிக்காக சாப்பிட 50,000 அல்லது 75,000 கொடுக்க அவர்களுக்கு பைத்தியமா? – எனவும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கையிலிருந்து குரங்குகளை கொள்வனவு செய்வது தொடர்பான எந்த பேச்சுக்களும் அரச தரப்பில் இருந்து இடம்பெறவில்லை என தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

சனத்தொகையில் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் – ஐ.நா கணிப்பு!

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 1,425.7 மில்லியனுக்கு எதிராக இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமது அண்டை நாடான சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்களைக் கொண்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளினது சனத்தொகை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு கணிப்பாகும்.

மேலும், தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் மற்றும் தாய்வானின் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.

கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும், 1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ. நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.

சூடானில் இராணுவப்படைகளுக்குள் முரண்பாடு – பொதுமக்கள் பேர் வரை பலி !

சூடான் நாட்டில் இராணுவம், துணை இராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்.எஸ்.எப்) துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்கான் ஆர்எஸ்எப் தீவிரவாத ராணுவம் என்று கருத்து கூறியதால், அவருக்கும் துணை இராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தகாலோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் கார்டோம், ஓம்டர்மன் பகுதிகளில் இராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே 3வது நாளாக பலத்த மோதல் நடந்து வருகிறது.ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப் அறிவித்தது.

இந்நிலையில், சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 1800 பேர் காயமடைந்திருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

இலங்கையையும் – இந்தியாவையும் இணைக்க கடலுக்கடியில் சுரங்கப்பாதை – மோடியிடம் கோரிக்கை !

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

பங்களாதேஷிடமிருந்து இலங்கை பெற்ற கடன் – 6 மாத கால அவகாசம் !

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கிய கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், சுமார்  51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.

அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் இன்னமும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன்களை மீளச்செலுத்துவதற்கு இலங்கை மேலும் 6 மாத காலஅவகாசத்தைக் கோரியிருக்கின்றது. அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக இலங்கை தெரிவித்துள்ளது’ என்று பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இதன்பின்னர் மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கும்போது, அது ‘இலவசமாக’ வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக அக்காலப்பகுதிக்குரிய வட்டி அறவிடப்படும் என்றும் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.