09

09

அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. நைஜீரியாவில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்

najad.jpgஅமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த வேளை ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

நைஜீரியா வந்த ஈரான் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அபுஜாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது.

பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.

ஐ. நா வின் தலைமைப் பதவியை நைஜீரியா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இங்கு டி 08 மாநாடு ஆரம்பமானது. எகிப்து, பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. சுமார் 930 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக ஆத்திரமடைந்த ஐ. நா. அண்மையில் நான்காவது பொருளாதாரத் தடையை ஈரான் மீது கொண்டுவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்குட்படாத இடத்தில் மற்றொரு அணு உலையை அமைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளது. தனது நாட்டுக் கப்பல்கள் சர்வதேசக் கடற் பரப்பில் சோதனை செய்யப்பட்டால் ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவித்தது தெரிந்ததே.

விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்

uno-vimal.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுக் காலையில் ஆரம்பித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக இவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதேவேளை ஐ.நா. வின் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்கும் படி கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களான புவாட் முஸ்ஸம்மில், நிமல் பிரேமவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்களது சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலையில் கைவிட்டனர். இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் நேற்றும் இயங்கவில்லை. இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி ஊர்வலம் நடாத்தி, சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம் எமது கோரிக்கைக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறியதாலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமே குதிக்கத் தீர்மானித்து அதில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எமது நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக இப்படியான போராட்டங்களைத் தேசப்பற்றுள்ளவர்களும், தாயகத்தின் மீது அன்பு கொண்டவர்களும் நாடு பூராவும் முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அந்தந்த நாடுகளிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த நிபுணத்துவ குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் வாபஸ்பெறச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன். நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படையினருக்குமாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன் என்றார்.

uno-vimal.jpg

துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்தான் – எஸ். ஸ்ரீதரன்

parliament.gifஎல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு  மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவுத் தூபியைக் கூட தகர்த்தெறிந்துள்ளீர்கள். இவ்வாறான தமிழர் விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடத்தில் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதை விடுத்து மேலும் மேலும் காயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.

மாலைதீவு அரசியல் நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவினால் சுமுக தீர்வு – அமைச்சரவை மீண்டும் சத்தியப்பிரமாணம்

p.jpgமாலை தீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்து ஜனாதிபதி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அந்நாட்டுப் பாராளுமன்றமான மஜ்லிஸ் பிரதம நீதியரசர், நான்கு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்ததாகவும், ஜனாதிபதி அங்கு செல்வதற்கு முன்னர் ஆளுந்தரப்புக்கும் எதிர்த்தரப்புக்குமிடையில் எந்தவிதக் கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

மாலைதீவு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி தீர்த்து வைத்தமை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செய்தியாளர் மாநாட்டைக் கூட்டித் தெளிவுபடுத்திய அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போதும் இதுபற்றி அறிவித்தார்.

கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர் நேற்று முன்தினம் 4.30 அளவில் மாலைதீவு ஜனாதிபதி நசீட் இராஜினாமாச் செய்த அமைச்சரவைக்கு மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து வைத்ததாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார். இது முற்றிலும் மாலைதீவின் உள்விவகாரம் என்றபோதிலும், கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒத்துழைப்பையே ஜனாதிபதி வழங்கினார் என்று கூறிய அமைச்சர், அரசியல் நெருக்கடி சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதையடுத்து சகல தரப்பினரையும் இராப்போசன விருந்துக்கு ஜனாதிபதி அழைத்திருந்தாரென்றும் கூறினார். சார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலும், நீண்டநாள் நட்புறவைக் கொண்ட நாடு என்பதாலும் ஜனாதிபதி அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை அவரது இல்லத்திற்குச் சென்று ஜனாதிபதி சந்தித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மாலைதீவில் நிலவிய அரசியல் குழப்ப நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையாக தீர்த்து சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சுமுக நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் புதிய அமைச்சரவையையும் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகக் கூறினார்.

சார்க் நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய நட்பின் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயல் அமைந்திருந்தது என்றும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.