15

15

இரான் தேர்தல் முடிவு குறித்து அமெரிக்க துணை அதிபர் கருத்து

baiden.gifஇரானிய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

என்.பி.சி. என்னும் ஊடகத்துக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில், இந்த விடயத்தில் நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பைடன் கூறியுள்ளார். முன்னதாக, இந்த தேர்தல் முடிவுகள் இரானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தல்; இடம்பெயர்ந்த வாக்காளர் 26வரை விண்ணப்பிக்க அவகாசம்

election_ballot_.jpgயாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் செய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் புத்தளம் அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் உள்ளனர். புத்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பித்தால் குறித்த பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதி தேர்தல் செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுமணசிறி கூறினார்.

ஓமான் கடலில் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் எழுவர் – மீட்டெடுக்கும் பணி துரிதம்

ஓமான் கடலில் வைத்து சோமாலியா கடற்கொள்ளை யர்களினால் கடத்தப்பட்ட வர்த்தகக் கப்பலில் இலங்கயர்கள் சிலரும் சிக்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. இதனை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாவும் அமைச்சு தெரிவித்தது.

நியூஸிலாந்துக்குச் சொந்தமான மேற்படி வர்த்தகக் கப்பல் ஓமான் கடலினூடாக செல்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நேற்று முன்தினம் (13) கடத்தப்பட்டு சோமாலிய கடற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இந்தக் கப்பலில் இலங்கையர் 7 பேர் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இதனை உறுதிப்படுத்த ஓமான் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்தது. அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை மேற்படி கப்பலில் பணி புரிந்த தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கப்பல் சிப்பந்திகளின் உறவினர்கள் கப்பல் கம்பனியை கோரியுள்ளனர்.

ஓமந்தை வரையான புகையிரத சேவை செப்டம்பரில்; நிர்மாணப்பணி ஆரம்பம்

yaal-devi.jpg‘உதுரு மிதுரு’  திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. செப்டம்பர் மாதத்தில் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக 20 வருடங்களின் பின் வவுனியாவில் இருந்தது தாண்டிக்குளம் வரை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புக்களை அந்தந்த பிரதேச மக்கள் ஏற்றுள்ளனர். இதன்படி ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை காலி மக்களும் யாழ். ரயில் நிலையத்தை அமைக்கும் பணியை ஹம்பாந்தோட்டை மக்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணி 2010ல் பூர்த்தி செய்யப்பட உள்ளதோடு இதற்கு சகலரதும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

சவூதி பஸ் விபத்து இலங்கையர் ஐவர் பலி: நால்வர் முஸ்லிம், ஒருவர் சிங்களவர்

சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

29 பேரை பலிகொண்ட இந்த விபத்தில், மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த ஐவரில் நான்கு முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் அடங்குவர். இவர்களில் நால்வர் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படும் காப்புறுதி நஷ்டஈடும், அதேபோன்று சவூதி அரேபியாவிலுமிருந்தும் நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – 06ஆம் குறிச்சி, இலக்கம் 412, அலியார் மரிக்கார் வீதியைச் சேர்ந்த ருபீன் முபீஸ், நிந்தவூர் இலக்கம் 219/1, பதுரிய்யா வீதியைச் சேர்ந்த சேகு ஆதம்பாவா மீராலெப்பை, அட்டாளைச்சேனை இலக்கம் 64 பி, எம்.பி.சீ.எஸ். வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஆமிர் ஹப்ஸான், சம்மாந்துறை இலக்கம் 357 இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த சுலைமான் லெப்பை அப்துல் கபூர் மற்றும் சவூதியில் இவர்களுக்கு பொறுப்பாக இருந்த விதானகமகே மென்டிஸ் அப்புஹாமி ஆகிய ஐவருமே பலியானவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

இந்த விபத்துச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்ப உறவினர்களுக்கு தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை அவர்களது இடங்களுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக அதிகாரி போப்பிட்டிய தெரிவித்தார்.

இவர்களுக்கு மேலதிக நஷ்டஈட்டுத் தொகையை சவூதி அரேபியாவிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் கவுன்ஸிலர் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சவூதி அரேபியாவிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டி ரியாத் நகருக்கும் தமாம் நகருக்கும் இடையில் வைத்து திடீரென ட்ரெக் வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் வண்டி திடீரென மோதியவுடன் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. பஸ் வண்டியின் தன்னியக்க கதவுகளும், யன்னல்களும் பூட்டப்பட்டுக் கொண்டதில் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து இலங்கையர்கள், நான்கு சவூதி அரேபியர்கள், மூன்று இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர், ஒரு எகிப்தியர், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் -மீதியான நேர அட்டவணை

t20-world-cup.jpgஜூன் 15, இங்கிலாந்து மேற்கிந்தியா, மாலை 6 மணி

ஜூன் 15, அயர்லாந்து பாகிஸ்தான், இரவு 10 மணி

ஜூன் 16, நியூஸிலாந்து இலங்கை, மாலை 6 மணி

ஜூன் 16, இந்தியா தென் ஆபிரிக்கா, இரவு 10 மணி

ஜூன் 18, முதலாவது அரையிறுதி , இரவு 10 மணி

ஜூன் 19, 2 வது அரையிறுதி, இரவு 10 மணி

ஜூன் 21, இறுதிப் போட்டி, இரவு 7.30 மணி

வடபகுதி விவசாயிகளின் கடன்களுக்கு இலவச காப்புறுதி

வடபகுதி விவசாயிகளுக்கு இலங்கை வங்கி வழங்கு கின்ற சகல கடன்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்க அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வடபகுதி விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்த காப்புறுதித் திட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்திருக் கிறது.

இலங்கை வங்கியும், விவசாய காப்புறுதி சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக் கின்றன. விவசாய கடன் பெறுபவர்கள் வரட்சி, வெள்ளம், விவசாய பாதிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் பட்சத்தில் இந்த காப்புறுதி மூலம் நிவாரணமளிக்கப்படும் என இலங்கை வங்கித் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மறைத்து வைக்கப்ப்ட்டுருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பகுதியில், பொலிஸார் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

T56 ரக துப்பாக்கிகள் 210, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தற்கொலை அங்கிகள் ஆகியவை அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தில், ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்கள் இவையாகும் 

”பத்மநாதன் அண்ணரின் கரங்களைப் பலப்படுத்துவோம்.” – தயா மோகன் விடுதலைப் புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

lttelogo.jpgஅன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

இலங்கையில் சுமார் 37 ஆயிரம் சட்டவிரோத வெளிநாட்டவர் – கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

இலங் கையில் சுமார் 37 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபேகோன் நேற்று தெரிவித்தார். ஒரு மாதகால வீஸாவில் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் வீஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் சட்டவிரோத மாக தங்கியுள்ள இவர்களில் பலர் இங்கு தொழில் புரிவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்களை கைது செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய உதவுமாறு திணைக்களம் பொதுமக்களையும் கோரியுள்ளது. ஒரு மாத வீஸா மூலம் இலங்கைக்கு இலகுவாக வர வாய்ப்பு உள்ளதாகவும் இவர்களில் பலர் ஆசிய நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.