சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவி விரைவில் இலங்கைக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகப் பொருளாதார நெடிக்கடியால் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.
June
June
தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நீதியான ஊடக சுதந்திரம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் வெள்ளைவான் தலைகாட்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கிறார். ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவரின் வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது; நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனைக் கட்டி யெழுப்புவதற்கு ஊடக சுதந்திரம் அவசியமானதாகும். ஊடக வியலாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜயந்த கடத்தப்பட்டு ஒருபகுதி தலைமயிர், தாடி வெட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இது தொடர்பில் அரசு கவலை தெரிவித்ததுடன், விசாரணை நடத்துவதாக சொல்கின்றது. கடந்த காலங்களில் பல ஊடக வியலாளர் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டுமுள்ள நிலையில், இது தொடர்பிலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இதேவேளை, போத்தல ஜயந்தவின் கடத்தல் தொடர்பில் பொலிஸுக்கு தகவல் வழங்கிய ஈநியூஸ் ஊடகவியலாளரான பேர்னாட் ரூபசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதன் அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படப் போகின்றாரென நான் கேட்கின்றேன். அவரது பிழை என்ன? இன்று ஊடகவியலாளர் நீதியாகவும் சுதந்திரமாகவும் செயற்பட முடியாது அச்சம் அடைந்துள்ளனர். என்வே அரசாங்கம் இக்கடத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது தொடர்பில் அரசு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. நாட்டில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு நாம் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் என்றார்.
இலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது. இலங்கை மோதல்களின் போது அனைத்து தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முழுமையான விசாரணை தேவை என்று மனித உரிமைகள் ஆணையர் கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்த சர்வதேச விசாரணைகள் தேவை என்று கூறிய அவர், அதற்கான ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவின் உதவிகளை தான் ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், அவரது இந்த கோரிக்கையை ஐ. நாவின் இலங்கைக்கான தூதுவர் தயான் ஜயதிலக நிராகரித்திருக்கிறார்.
உலகில் பல பாகங்களில் முன்னைய போர்களின் போது தோல்வியடைந்தவர்களே இப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய தயான் ஜயதிலக, அதேவேளை இலங்கைப் படையினர், தமது நாட்டு எல்லைக்குள், அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மாத்திரமே போரிட்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
வவுனி யாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மாரின் நலன் கருதி இருநூறு கட்டில்களைக் கொண்ட சகல வசதிகளுடனான புதிய மகப்பேற்று மருத்துவ மனையொன்று செட்டிக்குளம் பிரதேசத்தில் துரிதகதியில் அமைக்கப்படவிருக்கின்றது-
இந்த மகப்பேற்று மருத்துவ மனையைத் துரிதமாக அமைப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ளார்.
வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் 3100 கர்ப்பிணித் தாய்மார் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சிறந்த ஆரோக்கிய சேவை வழங்கவென தனியான மகப்பேற்று மருத்துவமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அமைச்சர் இத்துரித நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வடமாகாண புனர் வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் கலந்துரையாடியுள்ளார்.
வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் பெரும் பகுதியினர் 16, 17 வயதுகளையுடையவர்களாவர். இவர்களுக்கு விசேட ஆரோக்கிய சேவை வழங்குவது அவசியம். இதனையும் கருத்திற்கு கொண்டே இத்துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.
இதேவேளை இக் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்க மருத்துவமாதுகள் ஊடாக விசேட ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அநுரா தபுரம் மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி தீஸாவெவ, நுவரவெவ, கலாவெவ, ஆகிய குளங்களில் நீராடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொசன் குழுவின் தலைவரும் மாவட்ட செயலாளருமான எச். எம். கே. ஹேரத் தெரிவித்தார்.
பொசன் நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் நீராடுவதற்கு அபயவெவ, பாலவக்குளம், மஹாகனந்தராவ ஆகிய குளங்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் காரணமாக இடமபெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் இடைத்தங்கல் முகாம்களின் நிலைமை குறித்து நாட்டின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா கடுமையான விமர்சனங்களை கூறியிருந்தார்.
ஆனால் அது அவரது சொந்தக் கருத்து என்று இலங்கை அமைச்சர் ஒருவர் இன்று கூறியுள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் மிகப் பெரிய கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையில் வாழ்கிறார்கள் என்று தலைமை நீதிபதி சரத் சில்வா நேற்று கூறியிருந்தார்.
இடம் பெயர்ந்த மாணவர்களுக்கு 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும், க. பொ. த. (உ/த) பரீட்சையும் உரிய நேரத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். பரீட்சைகள் உரியய நேரத்தில் சகல பகுதிகளிலும் நடத்தப்படும்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரி, இந்துக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, நிவாரணக் கிராமங்களில் வழிகாட்டல் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைவிட விசேட வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.
தாயகத்தின் தற்போதைய நிலையில் – சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.
அதன் தொடர்ச்சியாக – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும். இந்தப் பணிகளை நிறைவேற்றி – நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.
சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து – ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் – தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.
தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.
சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது. முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.
சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.
சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.
இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை. நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.
ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.
தற்போதும் – இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே – மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.
தொடர்ந்தும் – அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.
நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?
நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?
இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?
நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?
இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும். அந்த நம்பிக்கையுடன் – நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் – நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் – தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும். நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com
ஐரோப் பாவில் வாழும் தமிழர்களால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படும் உதவிப்பொருட்களை தாங்கிய சிரிய கப்பலான கப்டன் அலி, தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் பயணம் செய்த கிருஸ்டன் வுட்மன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை தற்போது இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், தாம் நன்றாக நடத்தப்படுவதாகவும், அந்தக் கப்பலில் பயணம் செய்தவரும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் கண்காணிப்பாளருமான ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த கிருஸ்டன் வுட்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது வெறும் மனித நேய உதவித்திட்டம் மாத்திரமே என்று கூறும் வணங்காமண் அமைப்பைச் சேர்ந்த அர்ஜுனன் எதிரிவீரசிங்கம் என்பவர், இந்த உதவிப் பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் தாம் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இன நெருக்கடியிலிருந்தும் மீட்சி பெறுவதற்கான ஜப்பானின் உதவியை நாடியிருக்கும் இலங்கை அரசாங்கம் அதேசமயம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை நிராகரித்திருக்கிறது.
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசிடமிருந்து நேரடி உதவியை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக நேற்று முன்தினம் டோக்கியோவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
விவசாயம், உல்லாசப் பயணத்துறை, மீன்பிடித்துறை, சிறிய தொழிற்றுறைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி வழங்கும் என்று அரசு எதிர்பார்ப்பதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ரொசிகிரோ திகாயுடனும் வெளிவிவகார அமைச்சர் ஹிரோ பியூமிறாகசோனேயுடனும் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
செய்தியாளர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் விரும்புகின்றதா என்று கேட்கப்பட்ட போது, இல்லை அந்த மாதிரியான மனப்போக்கை நாம் ஏற்கமாட்டோம். அது தண்டனை வழங்குவது போன்ற தன்மையுடைய விசாரணை’ என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.
எதிர்மறையான ஒவ்வொன்றையும் வலியுறுத்துவதற்கு உலகம் முயற்சிக்கக் கூடாது. அதாவது இலங்கைக்கு கடினமான விடயங்களை ஏற்படுத்துவதற்கு சாதகமானவற்றையும் பொருளாதார தடைகளுக்கான அச்சுறுத்தலான விடயங்களையும் முயற்சிக்கக் கூடாதென்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் மீது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதானது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இட்டுச் சென்றுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தத் தருணத்தில் நாட்டுக்கு தேவைப்படுவது அதரவும் புரிந்துணர்வும் பரிவிரக்கமுமே என்றும் கண்டனம், தீர்ப்பு, வெளிக்காட்டும் தன்மை என்பன அல்ல என்றும் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.