வவுனி யாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மாரின் நலன் கருதி இருநூறு கட்டில்களைக் கொண்ட சகல வசதிகளுடனான புதிய மகப்பேற்று மருத்துவ மனையொன்று செட்டிக்குளம் பிரதேசத்தில் துரிதகதியில் அமைக்கப்படவிருக்கின்றது-
இந்த மகப்பேற்று மருத்துவ மனையைத் துரிதமாக அமைப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ளார்.
வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் 3100 கர்ப்பிணித் தாய்மார் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சிறந்த ஆரோக்கிய சேவை வழங்கவென தனியான மகப்பேற்று மருத்துவமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அமைச்சர் இத்துரித நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வடமாகாண புனர் வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் கலந்துரையாடியுள்ளார்.
வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் பெரும் பகுதியினர் 16, 17 வயதுகளையுடையவர்களாவர். இவர்களுக்கு விசேட ஆரோக்கிய சேவை வழங்குவது அவசியம். இதனையும் கருத்திற்கு கொண்டே இத்துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.
இதேவேளை இக் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்க மருத்துவமாதுகள் ஊடாக விசேட ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.