தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நீதியான ஊடக சுதந்திரம் அவசியம் – ரணில்

ranil-wickremasinghe.jpgதேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நீதியான ஊடக சுதந்திரம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் வெள்ளைவான் தலைகாட்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கிறார்.  ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;  நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனைக் கட்டி யெழுப்புவதற்கு ஊடக சுதந்திரம் அவசியமானதாகும்.  ஊடக வியலாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜயந்த கடத்தப்பட்டு ஒருபகுதி தலைமயிர், தாடி வெட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பில் அரசு கவலை தெரிவித்ததுடன், விசாரணை நடத்துவதாக சொல்கின்றது. கடந்த காலங்களில் பல ஊடக வியலாளர் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டுமுள்ள நிலையில், இது தொடர்பிலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதேவேளை, போத்தல ஜயந்தவின் கடத்தல் தொடர்பில் பொலிஸுக்கு தகவல் வழங்கிய ஈநியூஸ் ஊடகவியலாளரான பேர்னாட் ரூபசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதன் அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படப் போகின்றாரென நான் கேட்கின்றேன். அவரது பிழை என்ன?  இன்று ஊடகவியலாளர் நீதியாகவும் சுதந்திரமாகவும் செயற்பட முடியாது அச்சம் அடைந்துள்ளனர். என்வே அரசாங்கம் இக்கடத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது தொடர்பில் அரசு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. நாட்டில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு நாம் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *