June

June

கிழக்கு முதல்வரின் செயலாளர் சு.க.வில் இணைவு

கிழக்கு மாகாண முதல மைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண ஸ்ரீல.சு.க. அமைப்பாளருமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்தித்து உத்தியோகபூர்வமாக ஸ்ரீல.சு.க. அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வார் என கருணா அம்மானின் ஊடக பேச்சாளர் ஜூலியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு நீண்டகாலம் தொடர்ந்து சமுகமளிக்காத தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுப்புரிமையை இழக்கும் நிலை

parliament-of-sri-lanka.jpgஇலங் கைக்கு திரும்ப முடியாத நிலையிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை எதிர் வரும் நாட்களில் பறிபோகலாமென தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, சம்பிரதாய பூர்வமாக இதுவரை இல்லாத வகையில் தற்போது, விடுமுறைக்கான காரணம் கோரும் நிலை உருவாகியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சக உறுப்பினர்களுக்காக விடுமுறை பிரேரணைகளை சமர்ப்பிக்கும் உறுப்பினர்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்படும் நிலைமை உருவாகியிருப்பதாக கட்சிக்குள்ளேயே அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஏனெனில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக விடுமுறைப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களில், அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த அரச தரப்பு, இறுதியாக கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விடுமுறைப் பிரேரணைகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

சபையில் பிரேரணைகள் மூலம் விடுமுறைகளை பெற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இராஜதந்திர சிறப்புரிமையுடன் கூடிய கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக பேசி வருகின்றனர் என்பதே ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது. இதன் பின்னர் அந்த உறுப்பினர்கள் சார்பாக வைத்திய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே விடுமுறைகள் அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யான சிவாஜிலிங்கத்திற்கு விடுமுறை கோரி பிரேரணை சமர்ப்பிக்க வேண்டி நேரிடலாமெனவும் அத்தகைய தொரு நிலைமையில் விடுமுறைக்கான சான்றுகளை சமர்ப்பிப்பது என்பது சிரமமாக இருக்குமென கட்சிக்குள் அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அத்துடன், வெளிநாடுகளிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடு திரும்புமாறு, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 15 வரை சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நட வடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15, ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரினால் விசேட சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் அறிவுறுத்தப்படவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த 8 ஆம் திகதி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து பரீட்சார்த்திகளும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறினார்.

இதேநேரம், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய அடையாள அட்டை பெற முடியாத 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட சுற்றுநிருபமொன்றை பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கவிருப்பதாகவும் அநுர எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.

புத்தளத்தில் வசிக்கும் வட மாகாண முஸ்லிம்கள் படையினருக்கு கௌரவம் -அமைச்சர் றிஷாத் பிரதம அதிதி

rizad_baduradeen1.jpgவட மாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது புத்தளம் பிரதேசத்தில் வசித்து வரும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பாதுகாப்புப் படையினரைப் பாராட்டிக் கௌரவித்தனர். இது தொடர்பான வைபவம் அண்மையில் புத்தளம், வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாக  மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதோடு முன்னாள் சமூக சேவைகள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.எம். அபூபக்கர்,  மன்னார் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினரை சிங்கள மக்களைப் போலவே முஸ்லிம்களும் பாராட்டிää கௌரவித்து வருகின்றனர். வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விரைவில் அங்கு சென்று சுதந்திரமாகக் குடியேற முடியும் எனக் கூறினார்.

இவ்வைபத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் நாடு வெற்றிகொள்ளப்பட்டதையும் படையினரையும் வாழ்த்தும்  சுலோகங்களை ஏந்தியிருந்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

இலங்கை இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறுபவர்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும்: ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்து வெளியே செல்லும் மக்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் வலுக்கட்டாயத்தின் பேரில் வெளியே கொண்டுசெல்லப்படுதல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவற்றைத் தடுக்க இப்படியான பதிவுகள் தேவை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் நாளொன்றுக்கு முப்பது பேர் என்ற அளவில் அறிவிக்கப்படாத இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை மேற்கோள் காட்டி ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்காக எவரும் கொண்டுசெல்லப்படும்போது அது பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

சானியா மிர்சா 78 வது இடத்துக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஉலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் 98 வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா 20 இடங்கள் முன்னேறி 78 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பர்மிங்காமில் நடந்த டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் சானியா தர வரிசையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார். ரஷிய வீராங்கனை தினரா சபீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் 132 வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 154 வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற லியாண்டர் பெயஸ் 5 வது இடத்தில் உள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான “சற்’ வெட்டுப்புள்ளிகள் விரைவில்

பல்கலைக் கழகங்களுக்கு 2008/2009 கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான “சற்’ வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார்.
மீளத்திருத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காத்திருக்கிறது.

பரீட்சை பெறுபேறுகளை மீள மதிப்பிடும் பணியை பரீட்சைகள் திணைக்களம் பூர்த்தி செய்யவுள்ளது. 10 நாட்களுக்குள் “சற்’ வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக மதிப்பீடு செய்ய முடியும் என்று பேராசிரியர் காமினி சமரநாயக்கா கூறியுள்ளார்.

இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக 48 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடம் 20,600 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக்கழகங்களின் வசதிகளுக்கு அமைய மாணவர்கள் அனுமதித் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு திட்டமிடுவதாகவும் பேராசிரியர் சமரநாயக்கா கூறியுள்ளார்.

அதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடம் புத்தளவில் இருந்து பெலிஹுபில் ஓயாவிலுள்ள அதன் பிரதான வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தளவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விசேட அலகொன்றை ஏற்படுத்தவுள்ளோம். யாழ்ப்பாண, கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இந்த விசேட அலகு ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு தயங்கும் மாணவர்களின் பிரச்சினையை புத்தள வளாகம் தீர்த்துவைக்கும் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீள் மதிப்பீடு செய்யப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை சில நாட்களுக்குள் பரீட்சைத் திணைக்களம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க கூறியுள்ளார். சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் தமது பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனி ஈழம் என்பதற்கு நாட்டில் இடம் இல்லை

rajetha.gifஇலங் கையில் தனி ஈழம் என்ற கருத்தை இனிவரும் காலங்களில் நாட்டில் அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச தொடர்பாடல்களுக்கு பொறுப்பான குமாரன் பத்மநாதன் சர்வதேச தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் காரணமாக பல நாடுகள் பிளவு பட்டுள்ளன. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அவ்வாறானதொரு சாத்தியம் அற்றுப் போயுள்ளது. இதனை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்கு தெரிவு

muralitharan-sri-lankas.jpgநியுசிலாந் துடனான இருபது 20 உலகக் கிண்ண “சுப்பர் 8′ போட்டியில் 48 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி  “எப்’ பிரிவிலிருந்து அரையிறுதிக்கு இலகுவாகத் தெரிவாகியது. இத் தொடரில்  இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை.

நொட்டின் ஹாமில்  “எப்’ பிரிவுக்காக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கையணி டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய நியுசிலாந்து அணிக்கு சகல விக்கெட்டுகளையும்  இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அதே நேரம் “எப்’ பிரிவுக்காக  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

இலங்கை
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/
டிஎம் தில்ஷான் பி. பிபி மெக்குல்லம் ப. டிஎல் வெட்டோரி 48   37   5   0
எஸ்டி ஜெயசூர்யா பி. ஆர்எல் டெய்லர் ப. நாதன் மெக்கல்லம் 0   1   0    0
எல்பிசி சில்வா பி. ஜேடிபி ஓரம் ப. கெய்த் மில்ஸ் 13   10   2   0
கேசி சங்கக்காரா பி. எஸ்பி ஸ்டைரிஸ் ப. டிஎல் வெட்டோரி 35   35   3   0
டிபிஎம்டி ஜெயவர்தனே அவுட்டில்லை 41   29   6   1
துஷார் இம்ரான் எல் பி டபுள்யூ ஐஜி.பட்லர் 8   5   1   0
ஆங்லோ மேத்யூஸ் அவுட்டில்லை 6   4   0   0
 
மொத்தம்: 158/5 (20.0) | ரன் விகிதம்: 7.90 | உதிரிகள்: 7 (பைஸ்- 1, வைடுகள்- 4, நோ பால்- 1, லெக் பைஸ்- 1, அபராதம் – 0) 

விக்கெட் வீழ்ச்சி
1-3(0.3), 2-25(3.5), 3-87(11.3), 4-137(17.4), 5-147(18.5)

(பந்து வீச்சாளர் /ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால்)
நாதன் மெக்கல்லம் 4.0 0 22 1 0 0
கெய்த் மில்ஸ் 4.0 0 41 1 1 0
ஜேடிபி ஓரம் 4.0 0 23 0 0 0
ஐஜி.பட்லர் 3.0 0 29 1 0 0
டிஎல் வெட்டோரி 4.0 0 32 2 2 1
எஸ்பி ஸ்டைரிஸ் 1.0 0 9 0 0 0

 நியூ ஸீலாந்து
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/)
பிபி மெக்குல்லம் பி. துஷார் இம்ரான் ப. இசுரு உதனா 10 12 2 0
ஏ.ஜெ. ரெ‌ட்மா‌ண்‌ட் பி. எல்பிசி சில்வா ப. எஸ்எல் மலிங்கா 23 13 3 1
எம்.ஜே.குப்டில் பி. ஆங்லோ மேத்யூஸ் ப. எஸ்டி ஜெயசூர்யா 43 34 4 1
ஆர்எல் டெய்லர் ஸ்ட. கேசி சங்கக்காரா ப. அஜந்தா மென்டிஸ் 8 8 1 0
எஸ்பி ஸ்டைரிஸ் போல்டு அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
ஜேடிபி ஓரம் போல்டு இசுரு உதனா 7 12 0 0
பி.டி.மெக்லாஷன் பி. துஷார் இம்ரான் ப. அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
நாதன் மெக்கல்லம் ரன் அவுட் எம் முரளிதரன் 2 4 0 0
டிஎல் வெட்டோரி பி. எஸ்எல் மலிங்கா ப. எம் முரளிதரன் 3 5 0 0
கெய்த் மில்ஸ் ரன் அவுட் டிஎம் தில்ஷான் 4 6 1 0
ஐஜி.பட்லர் அவுட்டில்லை 2 2 0 0
 
மொத்தம்: 110/10 (17.0) | ரன் விகிதம்: 6.47 | உதிரிகள்: 4 (பைஸ்- 0, வைடுகள்- 3, நோ பால்- 0, லெக் பைஸ்- 1, அபராதம் – 0)  

விக்கெட் வீழ்ச்சி
1-30 (2.6), 2-39 (4.5), 3-64 (8.1), 4-66 (8.4), 5-93 (12.6), 6-95 (13.4), 7-98 (14.3), 8-100 (15.1), 9-102 (15.4), 10-110 (16.6) 

(பந்து வீச்சாளர்/ ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால் )
இசுரு உதனா 3.0 0 17 2 0 0
எஸ்டி ஜெயசூர்யா 3.0 0 28 1 0 0
எம் முரளிதரன் 4.0 0 18 1 0 0
எஸ்எல் மலிங்கா 3.0 0 26 1 2 0
அஜந்தா மென்டிஸ் 3.0 0 9 3 0 0
டிஎம் தில்ஷான் 1.0 0 11 0 1 0

ஆட்ட நாயகன் அஜந்தா மென்டிஸ்