இலங் கைக்கு திரும்ப முடியாத நிலையிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை எதிர் வரும் நாட்களில் பறிபோகலாமென தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, சம்பிரதாய பூர்வமாக இதுவரை இல்லாத வகையில் தற்போது, விடுமுறைக்கான காரணம் கோரும் நிலை உருவாகியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சக உறுப்பினர்களுக்காக விடுமுறை பிரேரணைகளை சமர்ப்பிக்கும் உறுப்பினர்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்படும் நிலைமை உருவாகியிருப்பதாக கட்சிக்குள்ளேயே அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஏனெனில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக விடுமுறைப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களில், அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த அரச தரப்பு, இறுதியாக கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விடுமுறைப் பிரேரணைகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
சபையில் பிரேரணைகள் மூலம் விடுமுறைகளை பெற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இராஜதந்திர சிறப்புரிமையுடன் கூடிய கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக பேசி வருகின்றனர் என்பதே ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது. இதன் பின்னர் அந்த உறுப்பினர்கள் சார்பாக வைத்திய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே விடுமுறைகள் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யான சிவாஜிலிங்கத்திற்கு விடுமுறை கோரி பிரேரணை சமர்ப்பிக்க வேண்டி நேரிடலாமெனவும் அத்தகைய தொரு நிலைமையில் விடுமுறைக்கான சான்றுகளை சமர்ப்பிப்பது என்பது சிரமமாக இருக்குமென கட்சிக்குள் அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
அத்துடன், வெளிநாடுகளிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடு திரும்புமாறு, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.