க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நட வடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15, ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரினால் விசேட சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் அறிவுறுத்தப்படவுள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த 8 ஆம் திகதி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து பரீட்சார்த்திகளும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறினார்.
இதேநேரம், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய அடையாள அட்டை பெற முடியாத 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட சுற்றுநிருபமொன்றை பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கவிருப்பதாகவும் அநுர எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.