June

June

இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளி ஒலிபரப்பும் உரிமை அரச ஊடகங்களுக்கு

anura_priyadarshana_yapa_1806_press.jpgஎதிர் வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளி,  ஒலிபரப்பும் உரிமையை அரச ஊடகங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை அரச ஊடகங்கள் ஒளி,  ஒலிபரப்புச் செய்யும்.

இலங்கை கிரிக்கட் அணியினர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்தங்களை ரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாண மக்களுக்கு தனித்துவமான அரசியல் தீர்வு – பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவிப்பு

basil.jpgவட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்,  வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி,  தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால்,  நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இராகலை நகரில் ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாழ். வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_ballot_.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இத்தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம். யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் 7250 ரூபாவும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கு 3750 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர், பிரதி முதல்வர், தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளடங்கலாக 23 பேரும் வவுனியா நகர சபைக்கு 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்றும் தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

moldivian-president.jpgமாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் மொஹமட் நசீத் நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ருவன்டி-20;’ கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று: தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

t20-world-cup.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20  கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணி இத்தொடரின் லீக் போட்டிகள் மற்றும் சுப்பர்-8சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டிய நிலையில் இன்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் சுற்றுக்களில் தடுமாறியபோதும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியை இலக்கு வைத்து இன்று பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நாளை லண்டன்,  ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

ஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்

a-9-loorys.jpgயாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறிகள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென்றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.

உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டன.  அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படைவீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவையான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

விமானத்தில் வந்தோர் பற்றிய விபரங்களை திரட்டுகிறது அமைச்சு

swine_flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸ¤டன் இலங்கைக்குள் வந்த சிறுவனுடன் பயணித்தவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் கோரியுள்ளது.

அதேநேரம், வத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பன்றிக் காய்ச்சல் சிறுவனுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர் பாகவும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி காலை 11.50 க்கு சிங்கப்பூரி லிரு ந்து இலங்கை வந்த எஸ். கியூ. 466 ரக சிங்கப்பூர் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான விமானத்தில் 185 பய ணிகள் வருகை தந்தனர்.

இதில் 91 பேர் மட்டுமே குடி வரவு – குடியகல்வு திணைக்களத்திடம் இறங்குவ தற்கான படிவத்தை நிரப்பி கையளித்துள் ளனர். ஏனைய 94 பேர் படிவங்களைக் கையளிக்கவில்லை. 94 பேரும் இலங்கை க்குள் வந்துள்ளனரா? அல்லது விமான நிலையத்திலிருந்து டிரான்சிட் முறையில் வேறு விமானத்தில் சென்றுவிட்ட னரா? என்பது பற்றிய விபரங்களை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் விபரங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

(ஏ) எச். ஐ. என். ஐ. வைரஸ் தொற்றிய வர்கள் இலங்கைக்குள் வருவார்களேயா னால் அவர்களையும் அவர்களுடன் நெருங் கிப் பழகியவர்களையும் தனியான முறை யில் சிகிச்சையளிக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் இலங்கைக் குள் வந்துள்ளதையடுத்து என்ன வகை யான முன்னெச்சரிக்சை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அவசர கூட்டமொன்று நேற்று சுகாதார அமை ச்சில் நடைபெற்றது.சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

பன்றிக் காய்ச்சலுடனான நோயாளி ஒரு வரை பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் காய்ச்சல் தொற்றிவிடாதபடி எவ்வாறான பாதகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நோய்த் தடுப்புக்கான மருந்து வகைகளை போதுமான அளவு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதுடன் இன்னும் தேவையேற்படும் பட்சத்தில் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆயத்தமாக இருக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவில் பன்றிக் காய்ச்சல் வைரஸடன் வருபவர்களை கண்காணிக்கும் பகுதியில் ஆளணியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சத் தீவு-அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் தீர்மானம்: கருணாநிதி

karunanithi.jpgஅனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிக மீனுக்கு ஆசைப்பட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாக 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. கட்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை.

கச்சத் தீவை மீட்கக் கோரி சட்டப் பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இல்லாததால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.