May
May
![]()
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது. இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடல்களின் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவம், அடுத்து வரவிருக்கும் தலைமைத்துவம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கின்றனர். இந்த கலந்துரையாடல்களின் போது, இலங்கையின் அரசியல், மனித உரிமைகள், மனிதாபிமான நிலைவரங்கள், வர்த்தக மற்றும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பேசப்படவிருப்பதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் கூறின.
அத்துடன், இந்தக் கலந்துரையாடலானது ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய நாடுகளுடனும் வழமையாக நடத்துவது போன்றதொன்றானதும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இவ்வாறானதொரு கலந்துரையாடல் கடந்த வருடமும் நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம். அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவத்தை வெளியேறுமாறு ஆப்கானிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடந்தது. ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரான பராவில் சென்ற வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்த எட்டு வருடங்களில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். அமெரிக்கப் படைகள் நடாத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்காவுக்குச் சாவு, ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாகக் கத்தினர். அரச கட்டடங்களின் ஜன்னல்கள் கதவுகளை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகங்கள் சிலவற்றுக்கும் தீவைத்தனர். இவர்களை அடக்க பொலிஸார் முயன்ற போது பொலிஸார் மீது கற்கள் போத்தல்கள் பொல்லுகளை வீசினர். நிலைமை மோசமடைந்த போது பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் சன நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர். வைத்தியசாலையில் மூன்றுபேர் சிகிச்சை பெறவந்ததாக டாக்டர்கள் கூறினர்.
நேற்று முன்தினம், அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் யார் என்பதை சி.ஐ.ஏ.உம் ஆப்கானிஸ்தான் இராணுவமும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினர்.
147 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள போதும் அதை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். 20 சிறுவர்களின் பிரேதங்களை தாம் கண்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கூறினர். பொதுமக்களின் உச்சக் கட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் உத்தரவாதம் தந்துள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி சொன்னார்.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்கேட்ஸ் இது பற்றிக் கூறுகையில் தலிபான்கள் வீசிய கைக்குண்டுகளில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்று தலிபான்கள் பொதுமக்களைக் கொல்வதாகவும் ரொபேர்ட் கேட்ஸ் சொன்னார். என்றுமில்லாதவாறு ஆப்கானிஸ்தானியர்கள் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலியானமைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்.
ஆக்கிரமிப்புப் படை ஆப்கானைவிட்டு வெளியேர வேண்டும். அதுவரை ஆர்ப்பாட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் பலியாவது ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஹமித் அல் கர்ஸாயிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென அவதானிகள் கூறுகின்றனர்.
இராணுவத்தில் இருந்து தப்பியோடிய போது கைது செய்யப்பட்டிருந்த 650 பேருக்கு வெசாக் தினத்தையிட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார். இதன்படி நேற்று 650 பேரும் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் லக்ஷ்மன் சில்வா தெரிவித்தார்.
வெலிகட சிறையிலிருந்து 165 பேரும், அநுராதபுரத்திலிருந்து 88 பேரும், போகம்பரயிலிருந்து 90 பேரும், வீரவிலயிலிருந்து 64 பேரும், குருவிட்ட சிறையிலிருந்து 47 பேரும், பல்லேகலயிலிருந்து 37 பேரும் உட்பட 650 பேர் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (மே 11) ஐ.நா.பாதுகாப்புச் சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட்டும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கில் மே 11 இல் தாங்கள் இருவரும் பிரசன்னமாகியிருக்கும் சமயத்தில் இக்கூட்டத்தை நடத்துமாறு அவர்கள் இருவரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி ஆய்வின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
வடக்கில் மோதல் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து சுமார் மூவாயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களில் சுமார் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்துள்ள மக்களின் வருகை அதிகரிப்பினால் சுகாதார சேவைகளில் எதிநோக்கும் சவால்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பெண்கள் மற்றும் யுவதிகளின் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான உதவிகளை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது.
குறிப்பாக குழந்தைகளைப் பிரசவிக்கும் பெண்களில் 15 சதவீதமானவர்கள் இரத்தம் வழங்குதல் அல்லது அவசர சத்திர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்கள், மரணம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வவுனியா, மதகு வைத்தகுளம் மீள்குடியேற்ற கிராமத்தில் குழாய் மூலம் நீர் விநியோகிக்கும் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
34 ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 12 மில்லியன் ரூபாய் செலவாகியதென திட்டத்தை நடைமுறைப்படுத்திய தேசிய பால்நிலை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் வி. சி. மகேந்திரன் தெரிவித்தார்.
ஒக்ஸ்பாம் அமைப்பு நிதி உதவியினை வழங்கியிருந்தது. 270 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். 110 குடும்பங்கள் குழாய் மூலம் நீர் பெறுவதற்கான இணைப்புக்களைப் பெற்றிருந்தன. நேற்று முன்தினம் காலை 11 மணிளயவில் வைபவ தியாக குடிநீர் விநியோகத் திட்டத்தை வவுனியா பிரதேச செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஆரம்பித்து வைத்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறியியலாளர் ஒக்ஸ்பாம் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கிராம மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். கடந்த காலத்தில் இந்த கிராமத்து மக்கள் நீரை பெறுவதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
புல்மோட்டையில் இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் வைத்தியசாலையை உடனடியாக வவுனியாவுக்கு இடமாற்றம் செய்து அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகேயும், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய உயரதிகாரிகளும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு திரும்பிய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படுகின்ற நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கிலேயே இந்தியாவின் உதவியோடு புல்மோட்டையில் இந்த நடமாடும் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது.
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆஸ்பத்திரி வவுனியாவில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டினால் வழங்கப்பட்டுள்ள நூறு கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியும் விரையில் வவுனியாவில் அமைக்கப்படவிருக்கின்றது.
அரச ஊழியர்களுக்கென ஹோமாகமை மவுன்ட் க்ளிபர்ட் மற்றும் ஜல்தர ஆகிய பகுதிகளில் மஹிந்த சிந்தனையின் ஜனசெவன திட்டத்தின் கீழ் 850 வீடுகள் அமைப்பதறகு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
சீன அரசாங்கம் இத்திட்டத்திற்கு 160 மில்லின் யுவானை நிதியுதவியாக வழங்குவதுடன் இலங்கை அரசாங்கம் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பித்து 30 மாதங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.