23

23

பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா விஜயம்

basil-raja.jpg ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா வந்துள்ளதாக இந்திய இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான நிலவரம் மற்றும் யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்களது பாதுகாப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் கண்டுபிடிப்பு

new_world.pngபூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் ஒன்றை எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக சிலி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைநோக்கி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்துள்ளார்.

பேரவாவி குடியிருப்பாளர்களுக்கு தெமட்டகொடவில் வீடமைப்புத் திட்டம் – முதற்கட்டமாக ஆகஸ்ட்டில் 320 வீடுகள் நிர்மானம்

dinesh_gunawardena.jpgகொழும்பு,  பேரவாவி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாகவுள்ளது.

1000 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டத்தினன் முதற்கட்டமாக 320 வீடுகளை நிர்மாணிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர அபிவிருத்தி,  புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்றுக் காலை தெமட்டகொட பகுதிக்கு விஜயம் செய்து வீடமைப்புத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டை நிர்மாணிக்க 30 இலட்சம் ரூபாவும் வீட்டை நிர்மாணிப்பதற்கான காணிக்கு 15 இலட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

UN_Logoஎல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏப்ரல் 23 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை (World Book and Copyright Day) தினம் : புன்னியாமீன்

word-book-and-copyright-day.jpgஉலக நூல் மற்றும் பதிப்புரிமை  (World Book and Copyright Day)  தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

“நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு” என புத்தகங்களின் அருமை பெருமைகளையும் அதனைக் கற்பவனின் மாண்பினையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறள் மூலம் கூறுகின்றார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமளவில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந்தன. அந்நாடுகள் தெளிவான நூல்வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கைகள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட்டினை தெளிவுபடுத்தியது. அறிவானது ஒருவனுக்கு ஆண்டவனால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடையாகும். வாசிப்பானது அறிவினைப் பெருக்கும் ஊற்றுமூலமாகின்றது. எனவேதான் வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது எனக் கூறுவர். இதற்கு அச்சாணிபோல அமைவதும் பங்களிப்புகளைப் புரிவதும் புத்தகங்களாகும். இவை மனிதனை அறிவின்பால் திசை திருப்புகின்றன. இதனை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்கியது.

இருந்தும் சர்வதேச நூல் ஆண்டில்  குறிப்பிட்ட இலக்கை எய்தாத  நிலையில் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் 28ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஏப்ரல் 23ம் திகதியை உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதினால் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 23ஆம் தினத்தன்று இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோவுடன் இணைந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு நல்கி வருகின்றன. இவற்றுள் நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions) அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association) உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகள்  குறிப்பிடத்தக்கவை.

இங்கு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) எனும்போது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகிறது.

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் என்ன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் மரணித்தார். 1951 ஆம் ஆண்டில் – சார்ல்ஸ் டோவ்ஸ், (நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்- பிறப்பு 1865) மற்றும் இந்தியாவில் 1992 – சத்யஜித் ராய்,  (உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் -பிறப்பு 1921) போன்றோரும் மரணித்த தினம் இதுவாகும்.

இதே நாளில் 1858 – மாக்ஸ் பிளாங்க்,  (நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் – இறப்பு 1947) 1867 – ஜொகான்னெஸ் ஃபிபிகர்,  (நோபல் பரிசு பெற்றவர்- இறப்பு 1928) 1897 – லெஸ்டர் பியர்சன்,  (நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் – இறப்பு. 1972) 1902 – ஹால்டோர் லாக்ஸ்னெஸ்,  (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் -இறப்பு 1998) போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்துள்ளனர்.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும்,  பெண்களும் புத்தகத்தையும்,  ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே ஏப்ரல் 23ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவந்தாலும் கூட,  அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவலைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்துமிருப்பது உணரப்பட்டுள்ளது. நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற் சந்ததியினருக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான கருவிகளாக அமைந்துள்ளன. இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இவை பேணப்பட்டாலும்கூட, அச்சு ஊடகங்களில் காணப்படும் நம்பகத்தன்மையைப்போல் இவையிருப்பதில்லை என்பது பரவலான கருத்தாகும். எனவேதான் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட அச்சு ஊடகங்கள் தொடர்ந்தும் தனித்துவ வளர்ச்சி கண்டு வரும் அதேநேரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் மேலும் முன்னேறிக் காணப்படுகின்றன.   

அதேநேரம், அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் மிகத் தாமதமாகவே அச்சு ஊடக வளர்ச்சி நடைபெறுகின்றது. இதற்குக் காரணம் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தேசிய ரீதியில் நூல் வெளியீட்டுக் கொள்கை ஒன்று காணப்படாமையே. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள யுனிசெப் தொடர்ச்சியான ஆலோசனைகளை கூறி வருவதுடன் அதற்கான குறிக்கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக திகழ்கின்றன. அண்மைக்காலமாக இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இருப்பினும் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நூல் வெளியீட்டின்போது சர்வதேச தராதரங்கள் பேணப்படாமை இன்றுவரை காணப்படக்கூடிய ஒரு குறைபாடாகவே உள்ளது. குறிப்பாக அச்சகங்கள் இலாப நோக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவதினால் நூல்களின் அச்சீட்டுத் தரம் பெருமளவுக்கு குறைவடைகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

விசேடமாக இந்தியா,  இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச புத்தக தராதர எண்ணை (ISBN) பெற்றுக்கொள்வதில் கரிசனை காட்டுவதில்லை. இந்நாடுகளில் அச்சிடப்படக்கூடிய ஏனைய மொழி நூல்களைவிட தமிழ்மொழி நூல்களில் இத்தகைய குறைபாட்டினை பெருமளவுக்குக் காணலாம். கலை, விஞ்ஞான,  இலக்கியப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக்கைக்கும் (1886) , 1979ஆம் ஆண்டின் 52ம் இலக்க Code of intellectual Property Act எனப்படும் அறிவாண்மைச் சொத்துகள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேண்டும்.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாசகர்களை வாசிப்புத்துறையில் ஈடுபடுத்தும்முகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பெரும் பணியாகக் காணப்படுகின்றது. புத்தகங்கள் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்களை இவ்விடத்தில் தொகுத்து நோக்குவது பயனுடையதாக இருக்கும்.

வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்,  நூலகம் மூளைக்கான மருத்துவமனை – யாரோ,  பிரதிபலிக்காத வாசிப்பு,  ஜீரணிக்காத உணவினைப்போன்றது – எட்மண்ட் ப்ரூக்,  புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீனப் பழமொழி, சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய முடியாத உலகிற்று அழைத்துச் செல்லும் காட்சி-யாரோ, புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்து – அடுத்த தலைமுறையினருக்கு தரப்போகும் சிறந்த சொத்து – ஹென்றி. மேற்படி சில கருத்துக்கள் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

‘என்னை என்றும் எப்போதும் எச்சமயத்திலும் கைவிடாத நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன’ என மறைந்த பாரதப் பிரதமர் நேருஜியின் கருத்தும் ‘புத்தகம் போன்றதொரு சிறந்த நண்பன் மனிதருக்கு எவருமில்லை’ என ராஸ்கி என்பார் நவின்ற கருத்தும் ‘எனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது’ என ஒரு கல்வியியலாளர் செப்பிய கருத்தும் புத்தகங்களின் அவசியத்தை எடுத்தியம்புகின்றன.

18ம் நூற்றாண்டில் தோமஸ் ஹேம்ட்வூர் மற்றும் பிரோய் போன்றவர்களின் அயராத உழைபினால் கிராமிய நூலகங்கள் உருவாகின. இக்காலப்பகுதியில் வில்லியம் எட்வேர்ட் என்பவர் மக்களுக்காக பொதுநூலகங்கள் மக்களால் நடத்தப்படவேண்டும் எனும் கோட்பாட்டில் பெரும் வெற்றிகண்டார். 1900.08.04ம் திகதி பெரிய பிரித்தானியாவில் நூலகச் சட்டம் அமுலாக்கப்பட்டது.

இவ்விடத்தில் இலங்கையின் தமிழ்மொழி புத்தக வெளியீடு சம்பந்தமாக சில கருத்துக்களையும் பதிவாக்குதல் வேண்டும். இலங்கையில் தமிழ்மொழி நூல் வெளியீட்டுக்கான தனிப்பட்ட நிறுவனங்கள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக செயற்பட வேண்டிய நிலைப்பாடு உண்டு. இந்தியாவைப் போல ஒரு எழுத்தாளரால் பதிப்பிக்கப்படக்கூடிய நூல்களை கொள்வனவு செய்ய அரச மட்டத்தில் நிலையான திட்டங்களில்லை. எனவே ஒரு தமிழ் நூலை வெளியிடக்கூடிய எழுத்தாளன் தான் அச்சிட்டப் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் நட்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். 

இலங்கையில் இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன சுமார் 5000 ரூபாவுக்கு உட்பட்ட தொகையில் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்தாலும்கூட, இங்கு ஒரு தேசிய கொள்கையின்மை காரணமாக இனவாதம்,  பிரதேசவாதம், அரசியல் செல்வாக்கு என்பன ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.

மறுபுறமாக ஒரு தேசிய கொள்கையின்மையாலும்,  மேற்படி திணைக்களங்களின் அடாவடித்தனப் போக்கினாலும் இலங்கையில் காணப்படக்கூடிய யுத்த நிலை காரணமாகவும் இலங்கையின் தமிழ்மொழி நூல் வெளியீடு என்பது ஒரு நீண்ட இடைவெளியை வளர்க்கப் போகின்றது என்பது உறுதி.  

இடம்பெயர்ந்தோரைத் தங்க வைக்க மேலும் 5 நலன்புரி முகாம்கள்

new_welfare.pngபாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாடி வருவோரைத் தங்கை வைக்க மேலதிகமாக 5 நலன்புரி முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள தான்டிக்குளம் வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம்,  முள்ளியகுளம் வித்தியாலயம்,  வீரபுரம் வித்தியாலயம்,  ஆண்டிக்குளம் வித்தியாலயம் மற்றும் கட்டடப்பம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்து.

இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்ற 15 நலன்புரி நிலையங்களுக்கு மேலதிகமாகவே இந்த 5 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பிரிட்டனுடன் இணைந்து இலங்கைக்கு நிவாரண உதவி வழங்க பிரான்ஸ் திட்டம்

பிரான்ஸ் பிரிட்டனுடன் இணைந்து இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கும் திட்டம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க முயற்சித்து வருவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முட்பட்ட இலங்கையர்கள் கைது

படகுகள் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு மீபுர பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் பயணத்துக்கு பயன்படுத்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஹில்லரி கிளிண்டன்

hillary-clinton.jpg இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது முயற்சிகளின் காரணமாக பொதுமக்களுக்கு சொல்லொணா துயரங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து முழு உலகமும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே மோதல் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்த வழி செய்யும் நோக்கில் ஒரு குழுவை இந்த வாரத்தின் பிற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து செல்லவுள்ள பல்கட்சி குழுவினரை தற்போது வரவேற்க இலங்கை அரசு தயாராக இருக்கும் என தாம் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.  பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதி நியமனத்தை இலங்கை அரசு முன்னர் நராகரித்திருந்தது.

கொற்றனின் கோட்டைக்குள்… : சபா நாவலன்

IDP_Camp_Barbed_Wireகுருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் புலிகளை அழித்துவிட்டதாகப் பெருமைகொள்ளக் காத்திருக்கும் சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவம். ஏழு சதுர கிலோ மீற்ரர் புதுக்குடியிருப்புக் கரையோரப் பகுதிக்குள் முடக்கப்பட்டுவிட்ட இன்னமும் கொல்லப்படாத மனிதர்களின் தொகை கூட யாருக்கும் தெரியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக  எத்தனை பிணங்களின் மேலும் புலிகள் அழிக்கப்படலாம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் மகிந்த குடும்ப அரசாங்கம். கண்மூடித்தனமான கொலைவெறிக்கு  அப்பாவித்தனமாக ஆதரவளிக்கும்  சிங்கள மக்கள். “இவர்கள் புலிகளோடு பத்து வருடங்களாக வாழ்ந்தவர்கள். முட்கம்பி முகாம்களை விட்டு வெளிவிட்டால் ஆபத்து” என்று பிரித்தானியத் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கும்  இராணுவ அதிகாரி. இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் கையாலாகது திகைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

கொல்லப்படுதலை நிறுத்த நாம் யார்க்கும் பலமில்லை. அழுவதற்குக் கூடக் கண்ணீரில்லை. ஆனால் செத்துப் போகாமல் தப்பிவரும் அப்பாவிகளின் எதிர்காலமென்ன என்றாவது சிந்திக்க மறுக்கிறோம். இழப்பதற்க்கு உயிரைத் தவிர இல்லாமல் போன சமூகத்தின் எதிர்காலம் கூட மரணத்துள் வாழ்தலோ என சிறீலங்காவில் வளரும் பாசிசம் சந்தேகம் கொள்ளவைக்கிறது.

மனிதர்கள் கருத்துக்களால் பிழவுபட பாசிசம் கோரமாய் தனது விஷ வேர்களை ஊன்றி விருட்சமாய் வளர்கிறது.

1. பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராட்டம் நடத்துவது புலிகள். ஆக, புலிகள் தான் மக்களின் காப்பாளர்கள் என்கிறது மிகப்பெரும் பகுதியான தமிழ் பேசும் மக்கள் பகுதி.

2. புலிகள் தான் தமிழ் பேசும் மக்களை “முன்னேற்றமடைய விடாமல்” குண்டுகளையும் துப்பாக்கிகளையும்  தூக்கிக்கொண்டலைகிறார்கள். இதற்கெதிராக அரசாங்கம் போராடுகிறது. ஆக இலங்கை அரசின் ஆதாரவாளர்களாக வரித்துக்கொண்டு புலிகளை அழித்தலே பிரதானமான செயற்பாடாகக்கொண்டு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் மிகச்சிறிய கூட்டம்.

இதில் முதலாவது பகுதியினரான பெருந்திரளான புலம் பெயர் தமிழர்களும் அவர்களின் உணர்வு பூர்வமான எழுச்சிகளையும், பங்களிப்பையும் தமது சொந்த அபிலாசைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் அடங்குவர். இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், குறிப்பாக வடபகுதி மக்கள் மத்தியிலும் இவ்வாறான புலிகளுக்கான மறுதலையான ஆதரவு உள்ளது என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய வாழ்க்கைச் சுமையின் தாக்கத்திற்கு மத்தியிலும் கொட்டும் மழையிலும், கொடிய பனியிலும், தொலை தூரங்களிலிருந்துகூட அரசிற்கெதிராகப் புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் பெருந்திரளான மக்களின் உணர்வுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களின் பெரும் பகுதியானவர்களிடம் புலிகள் தொடர்பாக விமர்சனப் பார்வை இருந்த போதிலும், அரசிற்கெதிராகப் புலிகளைத் தவிர எந்த மாற்று சக்தியும் இல்லாத நிலையிலேயே புலிகளின் தமது சொந்த உறவுகளுக்காக  எதிர்ப்பிடங்களில் பங்கு கொள்கிறார்கள்.

இவ்வாறான புலிகளுக்கெதிரான மாற்று வழி கருத்தியல் ரீதியாக உருவாவதை மழுங்கடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் இரண்டாவது பகுதியினரான அரச சார்பு குழுக்களே. அடிப்படையில், புலிகளை விமர்சித்தல் என்பது, இனப் படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசை ஆதரித்தல் என்ற கருத்தை உருவாக்கியதில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்களும் இந்த அரச ஆதரவுக் குழுக்களே.

இவ்வாறு புலி ஆதரவு என்பது அரச பாசிசத்தையும், அரச ஆதரவு என்பது புலிகளின் பாசிசத்தையும் வளர்த்தெடுத்த போக்கில் உருவான இன்னொரு போக்கும் இந்த இரு பகுதியினரின் கருத்தியலில் வளர்ச்சியின்றி முடங்கிப் போனது. அந்த மூன்றாவது அணுகுமுறை என்பது ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரச ஆதரவுக்குழுக்களின் அபாயகரமான போக்கை எச்சரித்திருந்தது.

3. இலங்கை அரசிற்கெதிரான போராட்டமென்பது, சில சமூக விரோதிகளால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்களல்ல, மாறாக இலங்கை அரசின் தொடர்ச்சியான தேசிய இன அடக்குமுறைகெதிரான எழுற்சியேயாகும். இவ்வடக்குமுறையின் இன்னொரு உச்ச வடிவம் தான் இன்றைய இன அழிப்பும் கூட. இந்த இனச் சுத்திகரிப்பிற்கெதிரான போராட்டத்தை புலிகள் தம்மைச்சுற்றிய பாசிசமாக வளர்த்தெடுத்து சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக, இலங்கை அரசிற்கெதிராகப் போராடுவதற்கான உரிமையை கோரிப் புலிகளை நோக்கிய போராட்டத்தையும், பிரதான எதிரியான இலங்கை அரசிடம் சரணடையாத விட்டுக்கொடுப்பிற்கு அப்பாலான போராட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தியது இந்த மூன்றாவது கருத்தியல்.

கெரில்லாப் போராட்ட அமைப்புக்களை நிர்மூலமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கிலும் முன்னதாகப் பலதடவைகள் பிரயோகிக்கப்பட அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் தமிழ்பேசும் மக்கள் மீதும் பிரயோகிக்கும் இன்றைய வன்னிச் சூழலானது, இந்த மூன்றாவது போக்கைக் கொண்டோரையும் ஒன்றில் முதலாவது போக்கிற்கு ஆதரவு நிலை கொண்டதாகவோ அல்லது இரண்டாவது போக்கின் சார்புனிலை கொண்டதாகவோ மாற்றியுள்ளது.

போராட்டங்களை அழித்தல்…

கிரேக்கத்தில் நடந்த சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தொழிக்க பிரித்தானிய அமரிக்க அரசுக்கள் பயன் படுத்திய அதே தந்திரோபாயத்தையே இலங்கை அரசும் மிக வலுவான இனவாத இராணுவத்தின் துணைகொண்டு தமிழ் மக்கள் மீது பிரயோகிகின்றது. 1946 முதல் 1946 – 1948 காலப்பகுதில் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவம் பெரிய நிலப்பரப்பினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சுமார் ஒரு ரில்லியன் பவுண்ட்கள் வரை செலவுசெய்தும் போராட்ட அமைப்பை அழித்தொழிக்க முடியாமல் பின்வாங்கிய பிரித்தானிய அரசிற்குப் பின்னதாக, கம்யூனிஸ்ட்டுக்களை அழிக்க அமரிக்கா முன்வந்தது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் நீர் வினியோகத்தைக் கட்டுப்படுத்துமாறு ஆணையிட்ட அமரிக்க உளவுப்படையான  சி.ஐ.ஏ, அப்பகுதியிலுள்ள மக்கள்  மீது  தேசிய இராணுவமான அரச படைகள் தாக்குதல் நடத்தவும் உறுதுணையாக அமைந்தது.

சோவித் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளின் இராணுவம் நிலைகொண்டிருந்த கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று குவித்தது அரச படைகள். இதன் விளைவாக போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய மக்களை சுட்டிக்காட்டி போராளிகளுக்கெதிராக கிரேக்க அரசு உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது. போராளிகள் தனிமைப்பட்டுத்தப்பட்டு அழிக்கப்பபடும் நிலையில் வெளியேறும் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்க ஆரம்பித்தனர்.  இவ்வாறு  போராளிகளுக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு வளர்ச்சியடைய, இதுவரை போராட்டத்திற்கு ஆதரவளித்த பெரும்பாலான விவசாயிகள் அதற்கு எதிரானவர்களாக மாற, அரச படைகள் வெற்றிகொண்டன. போராட்டம் அழிக்கப்பட்டது.

இந்த வெற்றியினூடாக இரண்டு பிரதான விடயங்களைச் சாதித்துவிட்டதாக பின்னதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் ஆவணமொன்றில் குறிப்பிடுகின்றனர்.
1. சோவியத் ஆதிக்கத்திற்கெதிரான வெற்றி.
2. மக்களுக்குப் போராட்டத்தின் மீதான நிரந்தரப் பயவுணர்வும் வெறுப்பும்.

மகிந்த அரசின் நிக்ழ்ச்சி நிரல்…

இவ்வாறு நீண்டதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலானது, பல நாடுகளில் போராட்டங்களும் புரட்சியும்  அழிவின் மறுவடிவம் என்ற சிந்தனைப் போக்கினை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம், சோவியத் கமியூனிஸ்ட் கட்சியின் போராட்டமானது மக்கள் சார்ந்த மக்களில் தங்கியிருக்கும் மக்களின் கண்காணிப்பிலான போராட்டமாகவன்றி, இராணுவ நோக்கிலான போராட்டமாக அமைந்திருந்ததே அரச படைகளின் அழிப்பிற்கு உட்படக்கூடியதான நிலைக்கு மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணமாகும்.

போராட்டங்களையும் புரட்சிகளையும் அழித்து தாம் விரும்பிய அதிகாரத்தை நிறுவிக்கொள்ள உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் கையாண்ட அதே வகைமுறையைத் தான் பேரினவாத மகிந்த குடும்பமும், அனைத்து ஏகாதிபத்திய வல்லசுகளின் மௌனமான அங்கீகாரத்துடன் கையாள்கின்றது.

அழிந்துபோகும் போராட்ட நியாயம்…

புலிகளின் போராட்டம் என்பது தவறான அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதை போராட்டம் ஆரம்பித்த காலம்முதலே பல ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. புலிகளின் தவறு என்பது போராட்டத்திற்கான நியாயத்தையே மழுங்கடிக்குமளவிற்குப் பாசிசமாக வளர்ந்து இன்று அரச குண்டுகளினதும் துப்பாக்கிகளினதும் வீச்சுக்குள் மக்களை நிறுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்ற மனித அவலமாக விசுவரூபமெடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை.

மகிந்த குடும்ப பாசிசமானது, தனது சொந்த தேசத்தின் மக்களை கிரேகத்திலும் கொரியாவிலும் அமரிக்க அரசு திட்டமிட்டது போலவே கிராமங்களுக்குள் முடக்கி, அவர்கள் மீது கொலைவெறியாட்டம் நடத்துகிறது. இதனால் புலிகளைத் தனிமைப்படுத்து, ஏற்கனவே மக்கள் மீது எந்தப் பற்றுமறுமற்ற புலிகளை மக்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபடும்படியான புறச் சூழலை ஏற்படுத்தியது. புலிகளின் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்களை சுட்டிக்காட்டி தேசிய விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் விரும்பாத புலிகள் என்ற குழுவின் போராட்டம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

1. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்பது இல்லாதவொன்றென்றும், புலிகள் மட்டுமே மக்களின் பிரச்சனை என்பதை நிறுவ முற்படுகிறது.
2. புலிகளைக் காரணமாக முன்வைத்துத்  தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் முன்னெழக்க்கூடிய அனைத்துப் போராட்டங்களையும் அழித்தொழிப்பது.
3. போராட்டங்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை சமூகத்தின் நினைவு மட்டத்தில் வளர்த்தெடுப்பது.
4. புலிகளை முன்வைத்து ஜனநாயக சக்திகள் உட்பட அரச எதிர்ப்பாளர்களையும் தவிர்க்கமுடியாமல் அரசின் பாசிச எல்லைக்குள் உள்ளாக்குதல்.

இனவழிப்பு நடவடிக்கையே…!

உலகெங்கிலும் போராட்டங்களை நிர்மூலமாக்கவும், அதன் மீதான வெறுப்புணர்வை உருவாக்கவும் கையாளப்பட்ட அதே தந்திரோபாயத்தைத்தான் இலன்கையரசும் பிரயோகிக்கின்றது என்பது ஒருபுறமும் மறுபுறத்தில் இலங்கையரசானது ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளினதும் உச்ச வடிவமாக அமைகிறது என்பது அதன் இனப்படுகொலையூடாக நிரூபிக்கிறது.

தான் விரும்பும் ஒன்றை அடைவதற்காக ஒரு நாட்டின் சட்டரீதியான அரசு நிராயுத பாணீகளான ஒரு குறித்த மக்கள் பிரிவினர் மீது இன்னொரு மக்கள் பிரிவினரின் நலனை அடிப்படையாக முன்வைத்து நடாத்துகின்ற கொலைகளும், சூறையாடல்களும் அழிவுகளும் இனப்படுகொலை என்பதை வரையறுக்கப் போதுமான முன்நிபந்தனையாகும்.

புலிகளை அழித்தல் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அம்மக்களின் அழிவைப் பொருட்படுத்தாது, அவர்களைச் சாரிசாரியாகக் கொன்றொழித்தும், அந்தக் கொலைக்களத்திலிருந்து தப்பியோடியவர்களை மிருகங்கள் போல முட்கம்பிச் சிறைகளில் அடைத்தும் பெரும்பான்மைச் சிங்களமக்களின் ஆதரவோடு நடாத்தும் இந்த அரசியலை இனவழிப்பு நடவடிக்கையே!

இன்னொரு தடவை தமிழ் மக்கள் தமது கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கவோ, தனது நிலத்தில் விவசாயம் செய்யவோ, ஏன் வாழவோ உரிமை கேட்கும் போதெல்லம் தான் விரும்பியதை அடைவதற்காக இதே அரசாங்கம்  ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துத் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக படுகொலை நடத்தும் தார்மீக உரிமையை இலங்கை அரசு இன்றைய இனப்படுகொலைகளூடாக அறிவித்திருகிறது.

போராட்டத்தின் அவசியம்…

1970 களிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த இனவாத அரசுகளுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் போராட்டமானது 1980 களின் பின்னர் தேசிய இன அடக்குமுறையின்  உச்சனிலை கண்டு ஆயுதப்போராட்டமாக பரிணாமமடைந்தது.

இன்று இந்தத் தேசிய இன அடக்குமுறை என்பது சிங்கள அரச பாசிசத்தின் அங்கீகாரத்தோடு இனப்படுகொலை என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளது. இந்த அரசியற் பின்புலத்தில் சிறீலங்கா அரச பாசிசத்திற்கெதிரானதும், இனப்படுகொலைக் கெதிரானதுமான  தமிழ் பேசும் மக்களது போராட்டத்தின் தேவை முநிறுத்தப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இணைந்து அரசிற்கெதிரான இப் போராட்டத்தை வளர்தெடுக்க வேண்டும். போராட்டத்தின் மீதான பயவுணர்வையும் வெறுப்புணர்வையும் மக்கள்மத்தியில் விதைத்து சரணடைவைக் கோரும் சிறிலங்கா அரச பாசிசத்தையும் அதன் ஆதாரமாக அமையும் அனைத்து சக்திகளையும் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அம்பலப்படுத்தவேண்டும். பல உணர்வுபூர்வமான தேசபக்த சக்திகளை உள்ளடக்கிய புலிகளின் ஆதரவுத் தளமானது சரியான போராட்டத்தை நோக்கி வென்றெடுக்கப்ப்பட வேண்டும்.

அரச பாசிசம்…

லசங்க விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளன்  அரசை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஒரே காரணத்திற்காக தெருக்கோடியில் வைத்துக் கொல்லப்பட்டார். சர்வதேச ஊடகங்களிலும் அறியப்பட்ட, மிகப்பலமான தொடர்புகளைக் கொண்ட ஒரு ஊடகவியலாளன் நடுத்தெருவில் வைத்து அரச காடையர்களால் தேசபக்தியின் பேரால், போரின் பேரால் கொல்லப்பட்ட சில நாட்களில் மகிந்த குடும்பத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய  ராஜபக்ஷ அவர் கொல்லப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்களுக்க்ச் செவ்வி வழங்குகிறார். 70 இற்கும் மேலான ஊடகவியலாளர்கள் அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அன்னிய தேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல ஊடகங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தனது அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. அப்பாவிச் சிங்கள  மக்கள் தேசபக்தி உருவாக்கிய பாசிசத்தில் கட்டுண்டு போயுள்ளனர்.

தமிழர்களுக்கெதிரான உணர்வு தலைவிரித்தாடுவதாக அண்மையில் இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த சிங்கள ஊடகவிலாளர் துயர்பட்டுக்கொண்டார். பேரூந்துகளில் சிங்கள  நடத்துனர்கள் கூட தமிழர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மிரட்டப்படுகின்றனர்.

தொலைதூரக் குக்கிராமங்களில் கூட சிங்கள தேசம் என்ற உணர்வும், மூன்று தேச சிங்கள உணர்வும் மகிந்த அரசை பௌத்த சிங்களத்தின் காவலனாகக் காண்பிக்கிறது. மகிந்த சிந்தனைய என்ற தேர்தல் வாக்குமூலம் இதைத்தான் முன்மொழிந்தது. ஆக, தெற்காசியாவின் கொல்லைப்புறத்தில்  ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன், இந்தியாவின் நேரடிப்பங்களிப்புடன், அவற்றின் வியாபார அரசியல் நலன்களுக்காக ஒரு கோரமான பாசிச அரசு உருவாகிவருகிறது.

பிரமித்துப் போன ஊடகவியலாளன்…

இவற்றிற்கெல்லம் மத்தியில், தேசிய இன ஒடுக்குமுறைகெதிராக ஆயுதப்போராட்டத்தை கோரி அரசியலுக்கு வந்தவர்களும், புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரி ஜனநாயம் பேசியவர்களுமன தமிழர்கள் பலர், ஒவ்வொரு காரணங்களுக்காக சிறீலங்கா அரசின் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அரசின் நிகழ்ச்சியொன்றைப் பிரதானப்படுத்தவில்லை என்ற புறக்கணிக்கத்தக்க காரணத்திற்காகக் கூட தெருவில் வைத்துத் தாக்கப்பட்ட ஊடகவியலாளன் வாழும் ஒரு இருண்ட தேசத்திற்கு “மக்கள்” ஊடகவியலாளன் அரச வரவேற்புடன் அரசின் கோட்டைக்குள், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுள் மிக முக்கியமான ஒருவரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டு வந்து அரசின் திறமையில் மலைத்துப் போய் தேசம்னெற் ஆசிரியரான கொன்ஸ்டன்டைன் எழுதிய கட்டுரைகண்டு அதிர்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன்.  அவரின் அரசியல் பற்றி இதுவரை நான் அறிந்திராவிட்டாலும், மனிதாபிமான உணர்வும், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட சக ஊடகவிலாளர்கள் மீதான அனுதாப உணர்வும், இனப்படுகொலைகளுகெதிரான கோபமும் கொண்டிருப்பார் என்றே எண்ணியிருந்தேன்.

கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையில் பெருமிதம் கொள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுள் வலம் வந்த அதே நேரத்தில் பவானி பெர்னாண்டோ என்ற இலங்கை வக்கீல் இந்தச் சிறைகளில் மக்கள் மந்தைகளாக நடாத்ததப்படுவதை சர்வதேச ஊடகமொன்றிற்கு விலாவாரியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். எல்லாம் போகட்டும் “ஆவணங்களே இல்லாமல்” ஏன் ஊடகவியலாளர்கள் திறந்தவெளிச் சிறை முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாவது ஒரு கேள்வியை கனவான் பசிலின் காதுக்குள் போட்டுவைத்திருக்கலாமே.

அரசிற்குப் பிரமித்துப் போய் நீங்கள் வரைந்த கட்டுரையைப் படிக்கும் சாதாரண புலம் பெயர் தமிழனை இது பிரமிப்பில் ஆழ்த்திவிடாது. புலிகளுக்கு எதிர் என்பதெல்லாம் அரச ஆதரவு என்று புலிகளும், தமிழ் அரச ஆதரவாளர்களும் சேர்ந்து வளர்த்தெடுத்த சூத்திரத்தை வலுப்படுத்தும், இது புலிகளின் பாசிசத்தையே வளர்த்தெடுக்கும்.

மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். எமது பிரதான எதிரி சிறீலங்கா அரசு என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருந்ததில்லை. ஆனால் புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் வரை தவிர்க்க முடியாமல் அவர்கள் புலிகளையே ஆதரிப்பார்கள். ஆக, இன்றைக்கு சிறிலங்கா பாசிச அரசிற்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை. இதற்கான அரசியலை முன்வைப்பதனூடாகவே ஜனநாயகத்தை வெற்றிகொள்ள முடியும்.!

Related Posts:

http://inioru.com/?p=2300
http://inioru.com/?p=2225