19

19

இலங்கைப்போரை நிறுத்த ஐ.நா. நிர்ப்பந்திக்கவேண்டும்- இலங்கை எம்.பிக்கள்

tna_.jpgமத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்து பேசினார்கள். நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து விளக்கி அவர்கள் விளக்கி கூறினார்கள். பின்னர் ஆர்.சம்பந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : 

இலங்கையில் தற்போது நடந்து வரும் மோதல்கள் குறித்த உண்மையான விவரங்களை இந்திய அரசிடம் விளக்கி கூறி உள்ளோம். எங்களுடைய கருத்துக்களை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை யொட்டியுள்ள 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிக்கி இருக்கும் தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை இந்தியாவும் சர்வதேச சமுதாயமும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். பாதுகாப்பு வளைய பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள 2  1 /2 லட்சம் தமிழர்கள் அபாயகரமான நிலையில் உள்ளனர். அவர்கள் கொல்லப்படும் ஆபத்து இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. பாதுகாப்பு வளைய பகுதியில் உள்ள எல்லா தமிழர்களும் அங்கிருந்து வெளிவர விரும்பவில்லை. சிலர் வெளியே வர விரும்பினாலும் பலர் தங்களுக்கு ஆபத்து என்று கருதி வெளியே வர விரும்பவில்லை.

வன்னி பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ராணுவம் ரசாயன குண்டுகளையும், நரம்புகளை செயல் இழக்க செய்யும் விஷவாயு குண்டுகளையும் வீசுகிறது. சர்வதேச அளவிலான மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. எனவே அழிவில் இருந்து தமிழர்களை காப்பாற்ற இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசின் அழுத்தமான நடவடிக்கைகளை பின்பற்ற இலங்கை அரசு தவறினால் ஐ.நா. சபை மூலம் நிர்பந்திக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறல் குறித்து ஐ.நா. மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. இலங்கை தமிழர்களின் நலன் கருதி தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியா அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கப்பலில் பிறந்த குழந்தை

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் நேற்று 484 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அழைத்து வரப்படுகையில் கப்பலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் தாய் ஒருவர் குழந்தை ஒன்றையும் பிரசவித்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

புதுமாத்தளன் பகுதியில் இருந்து 22 வது தடவையாக கீறீன் ஓஷியன் கப்பல் நேற்று பிற்பகல் 4 மணியளவில் புல்மோட்டைக்கு வந்தடைந்துள்ளது. அழைத்து வரப்பட்டவர்களுள் சுமார் 150 பேர் காயமடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி நாளை கொழும்பு வருகிறார்.

இந்தியா வின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிலையத்தின் நிறுவுநருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு வருகிறார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் பௌத்த மதத்தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் அவர் வவுனியா சென்று நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர் களையும் சந்தித்து அவர்களின் கஷ்டங் களையும் கேட்டறிவார்.
 

திஸ்ஸ அபேயசேகர காலமானார்

thissa-abeysekara.jpgசிங்கள திரைப்படத் துறையின் பிரபல இயக்குநர் திஸ்ஸ அபேயசேகர (வயது 70) நேற்றுக் காலமானார். திடீர் சுகவீனமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திரைப்படத் துறையில் வசனகர்த்தாவாக கால்பதித்த அவர், பின்னர் இயக்குநரானார். கறுமக்காரையோ, மஹாகெதர, வீரகாய போன்ற சிறந்த சிங்கள வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அரசாங்கத்தினால் தேசபந்து பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.

தேசபந்து அபேயசேகர 1996ல் ஆங்கிலத்தில் சிறந்த படைப்புக்காக புகழ்பெற்ற கிரேஷியன் விருதைப் பெற்றார். இதன் மூலம் உள்ளூர் ஆங்கில இலக்கிய வட்டாரங்களில் பிரபல்யம் பெற்றார்.

இலங்கை தமிழர் பிரச்சினை: அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. – ஐகோர்ட்டில் வழக்கு

india-election.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈழத்துக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள்: வைகோ

india-elc-2009.jpgஈழத் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. ஈழத்தமிழர்களை அழிக்க ராஜபக்சே முடிவு எடுத்து உள்ளார். இப்போது போரை நிறுத்துங்கள் என்றால் அவர் எப்படி நிறுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. எனவே ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.

கிளிநொச்சிக்கும் நானே ஜனாதிபதி; அப்பகுதியை அபிவிருத்தி செய்வது எனது பொறுப்பு – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுழு நாட்டினதும் ஜனாதிபதி என்ற வகையில் கிளிநொச்சி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது தமது பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சிக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்த பெருந்தொகைப் பணம் புலிகளுக்குத் தேவையான கட்டடங்களையும், பதுங்குக் குழிகளையும் நிர்மாணிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அங்கு இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் எதனையும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

ஒரு வழியால் நுழைந்து மற்றொரு வழியில் வெளியேறக் கூடிய பதுங்கு குழிகளைப் புலிகள் அமைத்திருக்கிறார்கள். நான் அவற்றை நேரில் பார்த்தேன்.

பாதை அபிவிருத்தியோ, மின்சார வசதியோ குடிதண்ணீர் விநியோகமோ, சனசமூக நிலையமோ எதுவுமே அமைக்கப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியில் அபிவிருத்தியை செய்ய வேண்டும். நான் ஒரு மாகாணத்தின் ஜனாதிபதி அல்ல; நாட்டின் ஜனாதிபதி ஆகவே அது என் கடமை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருடனான சந்திப்பொன்று நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு சங்கத்தின் கீதத்தைக் கொண்ட இறுவட்டு ஒன்றும் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

இன்று முக்கியமான ஒருநாள். இந்த நாட்டின் போக்குவரத்துத் துறையில் 5% அதிகமான பங்களிப்பைச் செய்கின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்று கூடியிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 800 பேரை இங்குக் கொண்டு வந்திருந்தேன். கொழும்பில் பெரிய பெரிய ஆட்கள் இல்லாது போன போது நீங்கள் தான் கைகொடுக்கிறிர்கள். உங்கள் சேவையை மதித்துத்தான் நாம் இங்கு உங்களை அழைத்திருக்கின்றோம். கொழும்பில் ஒரு பாதுகாப்புப் படையினரைப் போன்று நீங்கள் செயற்படுகிறிர்கள். உங்களின் தொழில் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்பதை நிரூபித்திருகிறோம். அதனால்தான் உங்களையும் அழைத்துப் பேசி வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தோம். முன்னரைப் போல் தனி அறையில் தயாரிக்கப்படவில்லை. அன்று என்னைச் சந்தித்த முச்சகர வண்டி சாரதிகள், பெற்றோல் கேட்கவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்து நாட்டை மீட்குமாறு தான் கேட்டார்கள். அதனைச் செய்வதாக வாக்குறுதியளித்ததைப் போல், நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் இன்று சந்திக்கின்றேன்.

பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களைப் பயணமாக வைத்துக் கொண்டு சண்டை செய்கிறார்கள். இன்னும் சிறிய பகுதிதான் நாம் மீட்க வேண்டியுள்ளது. நாம் தமிழர்களுடன் சண்டையிடவில்லை. முஸ்லிம் மக்களுடனோ, அமைப்புகளுடனோ சண்டை செய்ய வில்லை. நாம் பயங்கரவாதிகளுடன் தான் போரிடுகிறோம். அந்த மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

ஆனால், புலிகளும், அவர்களது ஆதரவாளர்களும் உலகம் முழுவதும் சென்று, எமக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும், இராணுவன் தளபதியும் மக்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். உடனடியாக ஐ. நா. கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்கிறார்கள். உதவியை நிறுத்தச் சொல்கிறார்கள். இந்த நாட்டு மக்களைப் பட்டினி போடும் தேவை எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உண்டு. நாட்டை அபிவிருத்தி செய்ய கடன் கேட்டால், தமிழர்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். நாம் அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொல்லவும் இல்லை. மக்களைப் பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வட பகுதியிலிருந்த சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் இன்று அகதி முகாம்களில் உள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்த வேண்டியது எனது கடமை.

யுத்தம் செய்தால், நாட்டில் அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்கள். நாம் யுத்தத்தை செய்து கொண்டு அபிவிருத்தியையும் முன்னெடுக்கின்றோம். அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையைப் 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். இ. போ. ச. ஊழியர்களுக்கு முன்பு 6 மாதம் சம்பளம் வழங்கவில்லை. அதற்கெல்லாம் வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்போது போனஸ் தாமதம் என்றதும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். புத்தாண்டுக்கு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். யுத்தத்தை இரண்டொரு நாளைக்கு நிறுத்துங்கள் என்று படையினர் என்னிடம் கேட்டால், எப்படியிருக்கும். அவர்களுக்கு அம்மா, அப்பாவைப் பார்க்கவும், பெண்டாட்டி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறை எடுக்க முடியாது என்பதால் தான், நான் அவர்களிடத்துக்குச் சென்றேன். இனிமேல் கோரிக்கைகளை முன்வைக்கும் முன்னர் படையினரையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யூ.எஸ். எயிட் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளி சந்திப்பு- கிழக்கு அபிவிருத்தி பற்றி ஆராய்வு

karuna_amman.jpgகிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் தொடர்பாக யூ. எஸ். எயிட் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளிதரன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

யூ. எஸ். எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி றெபேக்கா மற்றும் இணைப்பாளர்கள் அரசியலமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து யூ. எஸ். எயிட் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு விலகியிருக்கும் போராளிகளுக்கும் போரினால் பாதிப்புற்று கணவனை இழந்த தாய்மாருக்கும் புதிய முறையிலுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் மற்றும் கால்நடை அபிவிருத்தி விவசாயம் தொழில்நுட்பக் கல்வி முறைமை தொடர்பாகவும் மட்டக்களப்பு ஆயித்தியமலையிலுள்ள அரிசி ஆலையைப் புனர்நிர்மாணம் செய்து அதை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைவரெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொக்கட்டிச்சோலை மண்முனை இணைக்கும் பாலம் திட்டத்தினையும் அமைச்சர் முன்வைத்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பணய கைதிகளை விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது

piratasdentro.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்த 20 பேரை ஏடன் வளைகுடாவில் பணியில் ஈடுபட்டிருந்த தமது கடற்படையினர் விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்ட நேட்டோவின் டச்சு கடற்படையினர் கடற்கொள்ளையர்களை நிர்ப்பந்தித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த, பெரும்பாலும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று நம்பப்படுகின்ற பணயக்கைதிகளை விடுவிக்கச் செய்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்கொள்ளையர்களின் ஆயுதங்கள் களையப்பட்ட போதிலும், டச்சுச் சட்டப்படி அவர்களை கைது செய்வது சட்ட விரோதம் என்பதால், அவர்களை தடுத்து வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு பெல்ஜியம் நாட்டவர் மற்றும் ஒரு டச்சுக்காரர் உள்ளடங்கலாக 10 மாலுமிகளுடன் சேர்த்து பெல்ஜியம் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது

பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம்: எஞ்சிய 61 பேருக்கான நியமனம் மீளாய்வு

sri-lanka-upcountry.jpgமத்திய மாகாணத்தில் 61 பேருக்கான ஆசிரியர் நியமனத் தெரிவு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தின் எஞ்சிய 61 பேருக்கான நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் நேர்முகப் பரீட்சையின் பின் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் முன் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின் தற்போதைய மத்திய மாகாண கல்வி அமைச்சர், பதவியேற்றவுடன் உடனடியாக இந்நியமனங்களை இரத்துச் செய்ததுடன் மீளாய்வு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் பி. இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் மீளாய்வு நடவடிக்கை கெட்டம்பே கல்வி அமைச்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

பெயர்ப்பட்டியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பின் நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதிக்குள் நடாத்தப்படும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.