இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.
ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.
இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.