மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்து பேசினார்கள். நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து விளக்கி அவர்கள் விளக்கி கூறினார்கள். பின்னர் ஆர்.சம்பந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
இலங்கையில் தற்போது நடந்து வரும் மோதல்கள் குறித்த உண்மையான விவரங்களை இந்திய அரசிடம் விளக்கி கூறி உள்ளோம். எங்களுடைய கருத்துக்களை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை யொட்டியுள்ள 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிக்கி இருக்கும் தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை இந்தியாவும் சர்வதேச சமுதாயமும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். பாதுகாப்பு வளைய பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள 2 1 /2 லட்சம் தமிழர்கள் அபாயகரமான நிலையில் உள்ளனர். அவர்கள் கொல்லப்படும் ஆபத்து இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. பாதுகாப்பு வளைய பகுதியில் உள்ள எல்லா தமிழர்களும் அங்கிருந்து வெளிவர விரும்பவில்லை. சிலர் வெளியே வர விரும்பினாலும் பலர் தங்களுக்கு ஆபத்து என்று கருதி வெளியே வர விரும்பவில்லை.
வன்னி பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ராணுவம் ரசாயன குண்டுகளையும், நரம்புகளை செயல் இழக்க செய்யும் விஷவாயு குண்டுகளையும் வீசுகிறது. சர்வதேச அளவிலான மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. எனவே அழிவில் இருந்து தமிழர்களை காப்பாற்ற இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசின் அழுத்தமான நடவடிக்கைகளை பின்பற்ற இலங்கை அரசு தவறினால் ஐ.நா. சபை மூலம் நிர்பந்திக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறல் குறித்து ஐ.நா. மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. இலங்கை தமிழர்களின் நலன் கருதி தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியா அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.