நாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை
இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).
கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.
இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.
உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.
ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.
ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.
தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.
ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.