March

March

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

market-share.jpgகடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐரோப்பிய பங்குச் சந்தைகள். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாகவே சரிவுக்குள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கித் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

எச்எஸ்பிசி, பிஎன்பி பாரிபஸ், ஐஎன்ஜி போன்ற வங்கிகளில் ஒருபக்கம் வேலையிழப்பும், மறுபக்கம் பங்குகள் சரிவும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் ஐரோப்பாவில் எதிரொலிக்கும் என்பதால், அந்நாட்டின் நிலைமையை உற்று நோக்கி வருகிறார்கள் ஐரோப்பிய பொருளியல் நிபுணர்கள்.

பொருளாதார வீழ்ச்சி துவங்கிய பிறகு அமெரிக்காவில் மட்டும் 44 லட்சம் பேர் ஜனவரி வரை பணியிழந்தனர். கடந்த ஜனவரியில் மட்டும் 550,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தைகளின் பங்கு வணிகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதம் மட்டும் ஐரோப்பாவில் வேலையிழப்புக்கு உள்ளாகும் பணியாளர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கிழக்கு பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக 16ம் திகதி திறக்கப்படும்

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை வர்த்தக முகாமைத்துவம் விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
 

மேலும் 406 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ship.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதிக்கு கௌரவம் அளிக்க ஜனாதிபதி முடிவு.

20090302.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை காப்பாற்றிய பஸ் சாரதியை இலங்கைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பாக்கிஸ்தான் சாரதியை அழைத்து பாராட்டுவிழா நடாத்துமாறு ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அமைய வெகு விரைவில் அவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும். ஊடக, மனித உரிமை அமைப்புக்கள்

tissanayagam.jpgபயங்கர வாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும் என, உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. எனினும் அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

அனைத்துலக மன்னிப்புச்சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு, அனைத்துலக ஊடக சம்மேளனம் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கிய ஊடக, மற்றும் மனித உரிமை அமைப்புக்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் தாக்குதலை விமர்சித்துப் பத்தி எழுதிய திஸ்ஸநாயகம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பார்வை மற்றும் உடல் நலக்குறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உடனடியாக மோதலை நிறுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை

ban-ki-moon.jpgஇலங்கைப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதையிட்டு வியாழக்கிழமை கடும் கவலை தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், உடனடியாக சண்டையை நிறுத்துமாறு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வன்னிப் பிராந்தியத்தில் போர் வலயத்திலுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக வியாழனன்று அறிக்கை விடுத்திருக்கும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகம் கடந்த மாதம் நிலைமை மோசமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் மோதல் வலயம் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவாக சுருங்கியுள்ளது. 1 இலட்சத்துக்கும் 2 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான பொதுமக்கள் 14 சதுர கிலோமீற்றர் புதிய பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் புகலிடம் அடைந்திருப்பதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்கும் இலங்கை அரசும் புலிகளும் சண்டையை இடைநிறுத்த வேண்டுமென்று மீண்டும் பான் கீ மூன் அழைப்பு விடுத்திருப்பதாக அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்கள் பலர் உள்ள இடத்திலிருந்து தமது ஆயுதங்களையும் போரிடுவோரையும் அகற்றுமாறும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறும் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் தகவலின் பிரகாரம், பொதுமக்கள் யுத்த வலயத்திற்குள்ளும் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் தொடர்ந்து உயிரிழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஷெல் தாக்குதலால் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிவாரணப் பணியாளர்கள் செல்வதற்கு முடியாமல் இருப்பதால் எண்ணிக்கையை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியாமலுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியில் அதிக சனச் செறிவு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு தட்டுப்பாட்டால் மக்கள் இறப்பதாக ஐ.நா.வுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள நிலைமைகள் மலேரியா, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் மோசமாக பரவ வழிவகுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்நோய் பரவுவது தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மோதலில் சிக்கியுள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவ 155 மில்லியன் டொலர்கள் தேவையென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மோதலுக்கான பிரதான காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அதிதீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வீரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு எப்.பி.ஐ. உதவி

crc-04032009.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு விசாரணைகளுக்கு உதவ அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்துக் கலந்துரையாடிய எப்.பி.ஐ. யின் பணிப்பாளர் றொபர்ட் மியூலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தமது உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர்  ஏன் பெட்டர்சன் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் உள்விவகார ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ குழுவினர் 9ஆம் திகதி இலங்கை வருவர்

india-doctors.jpgஇந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர். 

“உண்மையான’ ஆண் பெண்ணை துன்புறுத்தான் – பான் கீ மூன்

ban-ki-moon.jpgபெண்களுக் கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  நாளை கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தாக்கம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பான், பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் ஆண்கள் அடிக்கடி சண்டைக்குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்குகிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நாட்டிய பயிர்களே எமக்கு உணவாகிறது. எமது சமூகங்களை ஒன்றிணைக்கும் இழைநாராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்ளுக்கெதிரான வன்முறைகளை அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களாகத் கருதவேண்டும். இவை எமது உயர்ந்த நாகரிகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். எனவே இவ்வாறான வன்முறைகள் வெறுக்கத்தக்கவையாகவும் ஐ.நா. சாசனத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரானவையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  உலகம் பூராகவும் ஐந்தில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படும் அதேவேளை, சில நாடுகளில் மூன்றில் ஒரு பெண் வீதம் அடித்து துன்புறுத்தல் அல்லது ஏனைய வகை துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்ததையடுத்து “பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற அழைப்புடன் கடந்த வருடம் பான் உலகளவிலான பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்.

அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கி முனையில் 4 படைவீரர்களால் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது யுவதியொருவரை சந்தித்ததாக தெரிவித்த பான், இச்சம்பவத்தால் அப் பெண் உடல் ரீதியாக மட்டும் துன்புறுத்தப்படவில்லை, சமூகம் அப்பெண்ணை களங்கப்பட்டவளாக நோக்குவதால் மனதளவிலும் அப்பெண் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். வெட்கம் என்ற தவறான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குறிப்பிட்ட பெண்ணின் குடும்பமும் சமூகம் தீண்டத்தகாதவளாக அவளை ஒதுக்கி வைக்கின்றதென தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய பான்கிமூன், “வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மரணம், காயம், மருத்துவ செலவீனம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை சிறியதாக இந்தாலும் அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது’ எனத் தெரிவித்துள்ளார். எனவே “இவ்வாறான துன்புறுத்தல்களுக்கெதிர?க ஆண்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் என்ற கருத்தை ஆண்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியதும் அவசியமாகும். மாற்றத்திற்கான தருணத்தை நாம் சந்தித்துள்ள இவ்வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவரிடமும் வேண்டுகோள்விடுக்கின்றேன்’ என பான் தெரிவித்தார்.

இளையோர் போராட்டங்களும் புலி எதிர்ப்பாளர்களின் போக்கும் ஒரு மீள்பார்வை : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

TYO_Logo யுத்தம் தொடங்கிய பின்னர், பிணங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் பிணங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகளும் தெளிவாகவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். இந்திய பிராந்திய வல்லரசானது தனது பங்கிற்கு புலிகள் மேற்கொள்ளும் யுத்தநிறுத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிக் கொள்கின்றது. இந்திய மையஅரசு தனக்கும் இப்போ நடக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சில அறிக்கைகளை விட்டு விடுகின்றனர். இன்று நடைபெறும் யுத்தமானது கூட்டுச் சதியின் ஊடாக அனைத்துத் தரப்புக்களின் ஆசீர்வாத்துடன் நடைபெறுகின்றது. மனிதத்தை கொல்பவர்களும் கொல்ல துணைபோகின்றவர்ளும் பல்வேறு தளத்தில் இருந்து தத்தம் கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் சில செயற்பாடுகளை செய்வதில் சுயமாக முடிவெடுக்கவும், கருத்துக் கூறவதை தெளிவாக முன்வைக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கின்றது. சர்வாதிகாரிகளை உருவாக்கும் இந்த வல்லரசு தென்கிழக்காசியாவில் நடைபெறும் மனித அலவலத்தை காட்டி தன்னுடைய நேசமுகத்தை தமிழ் மக்களின் இழப்புக்கள் மூலமாக காட்ட எத்தனிப்பதையே இங்கு கணிக்க முடிகின்றது. அமெரிக்கா தனது படையின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற முனைவதாக வந்த தகவலானது இந்தியா பிராந்திய வல்லரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ள முடிகின்றது. இவ்வாறு சுயமாக எடுக்கும் முடிவினை அமெரிக்கா கொண்டுள்ளதையும், இந்திய அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கை விடுவதையும், இந்தியாவின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்பதை சிறிலங்கா அரசு திடமாக நம்புகின்ற நிலையில் இந்த யுத்தத்திற்கு அமெரிக்காவே நேரடியாக பின்னிக்கின்றது.

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது – நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு பூட்டப்பட்ட பூட்டானது சாவி இன்றி இருக்கின்றது. பூட்டைத் திறப்பதற்கு சாவி யாரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்தும் தெரியாது ஒரு நாடகம் நடக்கின்றது. இவ்வாறு சர்வதேச சதிகள் தமிழின அழிப்பிற்கு துணை போகையில் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சதியினை முடியடிக்க முடியும். இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றி பலமுறை எழுதப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அங்கு அழிக்கப்படுவது மக்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களாகவும், பிணங்களை உருவாக்கத் துணை போகின்றவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இன்று புலம்பெயர்நாடுகளில் நமது மக்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ள இளையோர்கள் முன் தியாகிகளாக, ஒரு விமான ஓட்டிகளான ரூபன் அல்லது சிரித்திரன்; இவர்களோ பிரபாகரன் வீரர்களாக அல்லது உதாரண புருசர்களாகத் தெரிவர். இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. இளையோரின் போராட்ட உணர்வை புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறு சொச்சைப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள். “இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள் உந்திவிடும் புலிகளின் நடவடிக்கைக்ள்”

SLDF_Germany“இத்தகைய ஊர்வலங்களுக்கு இளம்பராயத்தினர் தற்போது முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். 24.02.09 அன்று ஜெர்மனி டுசல்டோர்வ் நகரத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில் பெருமளவு இளம்பராயத்தினர் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டதுடன் பிரிட்டிஷ், மற்றும் ஜப்பான் தூதரங்களிற்கு எதிராக முட்டை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி எரிக்கப்பட்டு ராஜபக்ஷாவின் பொம்மை உருவம் பகிரங்கமாக எரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் புலிகளினால் இளம்பராயத்தினர் பயன்படுத்தப்படுவதால் மொத்த தமிழ்மக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்படும் எனவும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.”  http://www.thenee.com/html/290209-4.html

இளையோரைப் பொறுத்தவரை வரலாறு தேவையற்றவையாக இருக்கின்றது. இளையோரின் தேசத்தின் மீதான பற்றுதல் மதிக்கப்பட வேண்டியதாகும். இவர்களைத் தூற்றுவதால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க முடியும் என்பதையே புலியெதிர்ப்பாளர்களின் அறிக்கை காட்டுகின்றது. இழையோர் அவர்களின் வயதுக்குரிய துடிப்புடன் போராடுகின்றார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு சரியாக அமைப்பு இல்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் தலைவர், தேசியம், தமிழீழம் என்ற மட்டத்தினுள் இருந்து கொண்டு போராடுகின்றதினால் இவர்களின் உழைப்பு என்பது வீண் விரையமாகின்றது. முன்னர் கூறியதுபோல தேசத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் தான் உதாரண புருசர்களாக இருக்க முடியும். இழையோரின் போராட்டப் பாதையை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் இந்த இழையோரின் உதாரண புருசர்களாக உருவாக மாட்டார்கள்.

இன்னெரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது போராட்டம் என்பது மாலை நேரவிருந்தல்ல. போராட்டங்கள் பலவகை உண்டு. அதேவேளை உணர்வுகள் வெளிப்படுவதிலும் பல வகை உண்டு. இவைகள் அரசியல் உணர்விற்கேற்ப மாறுபடும். இன்று போராட்டத்தை ஐரோப்பிய வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது மேற்கொள்ளப்படுகின்ற இனவாதத்திற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள், உலகில் போராடும் இனங்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கொடுக்காதவர்கள், தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வமின்மை, வாழுகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களில் பங்கெடுக்காதவர்கள் இவற்றை வெறுத்து ஒதுங்கினர். போராட்டத்தில் பங்கு பற்றினால் அவர்களைப் பற்றி கீழ்தரமாக கணித்துக் கொண்டனர்.

நாம் ஊர்வலங்களுக்கு செல்வதில்லை. அவ்வாறானவர்கள் வேறுவிதமான சிந்தனை கொண்டவர்கள். இடதுசாரி அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் மூலம் தமது நலன் பாதிக்கப்படும் என ஒதுங்கியவர்கள். இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது. ஏன் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கு என்று ஒரு பெயர் உண்டு அதனை காப்பாற்றுவது போல நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதனையும் மீறி லண்டன் ஊர்வலத்தில சில அசம்பாவிதம் நடைபெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் கூட இவர்களின் போராட்ட விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக போராட்ட ஒழுங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.

TYO_Protestஇன்று மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்குபற்றுவது எப்போ? ஆதரவு திரட்டுவது எப்போ? எனக் கேள்வி கேட்கப்படுவதும் இயல்பானதே. ஆனால் புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர். மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) இன்றைய இராணுவத் தோல்விகளை இட்டு விரக்தி கொள்வதற்கு மக்களே காரணம் எனக் கூறுகின்றார். மக்கள் தேசத்தின் விடுதலை பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை என்வும் கூறினார்.

ஆனால் புலிகளின் தலைமை மீதுதான் இந்த விமர்சகர் குற்றம் சுமத்தியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு லாயக்கில்லாது அப்பாவிகளான மக்கள் மீது தனது வெறுப்பைக் காட்டினார். இவ்வாறானவர்களின் பேச்சுக்களை மாற்றியமைப்பதற்கு இங்கு வாழ்து போராடுவதன் மூலமே போராட்டத்திற்காக பாதைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எமது போராட்டம் இன்றோ நாளையே முடியப் போவதில்லை. இன்று சர்வதேச சதியினால் எமது மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படப் போகின்றது. உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற போகின்ற நிலையில் புதிய தலைமுறையாகி நீஙகள் நடைமுறைப் போராட்டத்தின் மூலம் உங்கள் எதிரிகள் யார் என்பதை போராட்டங்களே கற்றுக் கொடுக்கும்.

வன்னியில் இனவழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலம் முதலே உங்கள் போராட்டத்திற்கு தகுந்த பலன்கிடைக்கவில்லை என உங்கள் மனம் குமுறுகின்றது. இவைகளை உணர முடிகின்றது. இங்கு சர்வதேச சதி என்பது பொருளாதார நலனின் அடிப்படையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுரண்டும் பொருளாதார அமைப்பை பற்றி அறிந்து கொள்ள அதற்கான தேடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நாம் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்து கொள்ள எமக்கு அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற நிலையை போக்குவதற்கான போராட்ட நுணுக்கம் உங்களுக்கு ஏற்படும்.