
தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அனைத்துலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வன்னிப் பெருநிலப் பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1015 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மரநிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.
இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.
அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை செய்துவருகின்றது.உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகின்றது.
வன்னிப் பிரதேசங்களுக்கு அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாகக் கூறியபோதும் மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.
வன்னியிலுள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமனை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள் எதுவும், மருந்துகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் இயங்குகின்றது.
எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.
ஆகவே நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம். மனித அவலங்களைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வன்னியில் உள்ள 3,30,000 மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன் மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புகளும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளூர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இடமளிக்கப்படவேண்டும்.
அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருதவேண்டிய நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.