இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, வவுனியா மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, வைத்தியம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவனியா மாவட்டத்தில் தற்போது 3 நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தாங்கள் சமைத்து உண்பதற்குரிய வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு கூட்டு சமையல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா அரச செயலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும், உள்ளுர் தொண்டு நிறுவனங்களினதும் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.