யாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேலும் 45 லொறிகள் நாளை மறுதினம் 12ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நேற்று தெரிவித்தது.
‘ஏ-9’ வீதியூடாக இப்பொருட்கள் கொண்டு செல்லப் படவுள்ளதுடன், மாதாந்தம் 150 லொறிகளில் யாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகள், அங்கிருந்து யாழ் குடா நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை இங்கு ஏற்றிவந்து சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டுக்கு 350 மெற்றிக் தொன் உணவுகளை ஏற்றிக்கொண்டு 35 லொறிகள் நேற்றுக் கொழும்பு வெலிசறை உணவுக் களஞ்சியசாலையிலிருந்து புறப்பட் டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வாராவாரம் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பப்படும். தெற்கில் போன்றே குறைந்த விலையில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட் களைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.