முல்லைத் தீவில் புலிகளிடம் சிக்குண்டுள்ள தமிழ் மக்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்தபோது இந்த குற்றச்சாட்டுக்கள் நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ளன.
சனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இது குறித்து தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்ட அமைச்சின் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்டக் குழுவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் ஜெனீவா சென்றிருந்த போது பல ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். அவர்கள் வன்னி தமிழர்கள் குறித்து தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவிக்கையில் :-
தற்போது அனைத்து நாடுகளிலும் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் புலிகளுக்கு சாதகமாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் தவறான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். லண்டனில் வாழும் இலங்கை இளைஞர் ஒருவர் அண்மையில் ஜெனீவாவிலுள்ள ஐ. நா. செயலகத்திற்கு முன்பாக தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்தார். இவருக்கு லண்டனில் விழா எடுத்துள்ளார்கள். அதுமட்டுமன்றி புலிகளின் விமானம் கொழும்பில் அண்மையில் நடத்திய தாக்குதலை பாராட்டி கனடா வாழ் தமிழர்கள் அதனை கொண்டாடியுள்ளார்கள். இது தொடர்பாக நான் இலங்கையில் உள்ள கனேடிய தூதுவரை தொடர்புகொண்டு எதற்காக பயங்கரவாதிகளுக்கு விழா எடுக்க வேண்டுமென வினவினேன்.
அதற்கு கனேடிய தூதுவர், அங்கு வாழ்வோருக்கு அதற்கான சுதந்திரம் இருப்பதாக கூறினார். அப்படியானால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்காக விழா எடுப்பீர்களா? எந்தவொரு சுதந்திரத்துக்கும் வரையறை இருக்க வேண்டுமென நான் தெரிவித்தேன். இது எவ்வளவு உணர்வுபூர்வமான விஷயம் என்பதனை கனேடிய தூதுவர் ஒப்புக்கொண்டார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில், முல்லைத்தீவின் 35 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்புக்குள் மூன்று இலட்சம் சிவிலியன்கள் முடங்கிக் கிடப்பதாக சர்வதேச நெருக்கடி தொடர்பாக ஆராயும் குழு வெளியிட்டுள்ள செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கலாநிதி பாலித கொஹன்ன பதிலளிக்கும் போது ‘அது முற்றிலும் தவறான கணிப்பீடு’ எனக் கூறினார்.
மேற்படி குழு ‘தமிழ் நெட்’ இணைய தளத்தினூடாகவே கருத்துக்களை பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறும்படியிருக்குமேயானால் மூன்று இலட்சம் மக்களும் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். ஆனால் அங்கு யாரும் அப்படி நின்றுகொண்டு இருக்கவில்லை என்பதனை எமது விமானப் படையின் உளவுப் பிரிவு ஊர்ஜிதம் செய்துள்ளது.
குறித்த 35 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் 70 ஆயிரம் சிவிலியன்களே இருக்கின்றனர். இதுவே உண்மை எனவும் கொஹன்ன தெரிவித்தார்.