![]()
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்ட நிலையிலும் இலங்கையின் பொருளாதாரம் பலமாகவேயுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இலங்கை கடன் பெறும் நாடுகளில் எத்தகைய நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அரசு அடிபணியவுமில்லையென அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான வீண் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நாட்டிற்குப் பொருத்தமில்லாத நிபந்தனைகளுக்கு அடிபணிந்தே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார். இக் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் வங்கிகள், பாரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி பேர் தொழில் இழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலத்துக்குள் 81 பிரபல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் மட்டும் ஆறரை இலட்சம் பேர் தொழில்வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். ஜப்பானிலும் இதேநிலைமைதான். பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாகனங்களுக்கான கேள்வி சர்வதேச ரீதியில் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ‘டொயாட்டா’ போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழலொன்றில் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலமாகவுள்ளது. சாத்தியமானதொரு பொருளாதாரக் கொள்கையை அரசு கடைப்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை நடுநிலையில் பேணுவதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளித்து ஊக்குவிப்புகள் வழங்கப்படும் அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த வருடத்தில் 860 மில்லியன் டொலரில் முதலீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்கள் ஒரு போதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேவேளை அரசதுறை மற்றும் தனியார் துறை இரண்டையுமே ஒரேநிலையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூக்கத்திலிருந்து கொண்டு பேசுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 2002ம் ஆண்டில் அவர்களது ஆட்சிக்காலத்தில் அரச சேவையைச் சீரழித்து அரச நியமனங்களை நிறுத்தி தனியார் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை உட்பட ரணில் விக்கிரமசிங்கவின் நவீன லிபரல் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டின் நிலை சீரழிந்திருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.