‘புலிகளை அரசியல் ரீதியிலும் தோற்கடித்து. புதிய தமிழ்த் தலைமையை உருவாக்க வேண்டும்’

deu-guna.jpgபுலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததும் தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமையொன்றைக் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், மீண்டும் தலையெடுப்பார்களென்றும் எனவே அவர்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான அரசியலமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு இன்று ஒழுங்கான அரசியல் தலைமைத்துவம் இல்லை. அனைவரையும் புலிகள் கொன்றொழித்து விட்டார்கள். புதியவர்கள் உருவாகவும் இல்லை. எஞ்சியுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். புலிகள் சார்பு அல்லாத அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும். புலிகளின் கோரிக்கைகளையன்றித் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் மக்களை நாம் வெல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது”, என்று தெரிவித்த அமைச்சர் குணசேகர, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்க முடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து விலகியிருக்கும் அரசியல் கட்சிகள் அதில் இணைந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் குணசேகர, இந்தத் தருணத்திலாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் பாதையில் பயணிக்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *