

1._._._._._.
வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.
200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.
சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.
இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.
இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.
அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.
2._._._._._.
‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.
வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.
இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.
நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?
இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.
வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.
அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.