இந்தியாவிலிருந்து புல்மோட்டைக்கு வருகை தந்திருப்பவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்ற முழுமையான ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் இந்தியாவுடன் மேற்கொண்ட இராஜதந்திர மட்டத்திலான உறவுகளின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.
புல்மோட்டைக்கு டாக்டர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர். இந்த விடயத்தை பிரதானமாக்கிக் கொண்டு ஜே. வி. பியினர் தங்களது போஸ்டர் பிரசாரத்துக்கான புதிய தொணியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்திய டாக்டர்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளமை தொடர்பாகவும், அவர்கள் புல்மோட்டையில் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவும் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.
இலங்கை வந்துள்ள மருத்துவக் குழு இராணுவ மருத்துவக் குழு என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புல்மோட்டை பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு கனியப் பொருட்கள் உள்ளன. எனவே இந்த இந்திய டாக்டர்களின் புல்மோட்டை வருகையை ஜே. வி. பியினர் விமர்சனத்திற் குள்ளாக்குகின்றனர். ஜே. வி. பியினர் தேவையில்லாத கற்பனையை செய்து கொண்டு உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் சுனாமி நேரத்தில் இந்தியா உதவி வழங்கிய போது ஏன் இந்தியாவின் உதவியை ஏற்கவில்லை என கேட்டனர். இப்போது ஏன் உதவியை பெறுகிaர்கள் என கேட்கிறார்கள் ஜே. வி. பி. இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறது. புல்மோட்டையில் 45 கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படை சிகிச்சையை பெறுபவர்கள் பதவிய, கந்தளாய், திருமலை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுவார்கள். உடனடியாக கழற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியவாறுதான் இந்த ஆஸ்பத்திரி இயங்குகிறது. இதனாலேயே இதனை நடமாடும் ஆஸ்பத்திரி என்று கூறுகிறோம். இது கூட தெரியாமல் நடமாடும் ஆஸ்பத்திரி என்றால் என்ன? என ஜே. வி. பி. கேள்வி கேட்கிறது.
இந்தியா பெருந்தொகையான மருத்துவப் பொருட்களை எமக்கு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் அல்ல. எமது நாட்டிற்கு ஏற்ற எம்மால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்கியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகள் பலவும் உதவி வழங்க முன்வந்துள்ளன. எவரையும் நாம் நிராகரிக்கவில்லை.
இந்திய டாக்டர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக இலங்கையின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. முப்படைகளுக்கும் நிரந்தர டாக்டர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. நாட்டுப் பற்றாளர்கள் என கூறிக்கொள்பவர்களின் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 50 டாக்டர்களை கட்டாயமாக முப்படையின் மருத்துவ பிரிவுக்கு அனுப்ப வேண்டி வந்தது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.