வடக்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தேசிய வீடமைப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் எல்.எஸ். பலன்சூரிய தெரிவித்தார்.
ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் 60 இலட்சம் ரூபா செலவில் மட்டக்களப்பு கல்லடியில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு கடந்த இரண்டு வருடகாலத்தில் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
யுத்தம் மற்றும் கடல்கோளினால் வீடுகளை இழந்த 15 ஆயிரம் குடும்பங்கள் இதனால், நன்மையடைந்தன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் சில அமைப்புகளின் நிதி உதவிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டன.
கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வீடமைப்பு நிர்மாண நடவடிக்கைகளைப் போலவே வட மாகாணத்திலும் வீடுகளை நிர்மாணிக்க ஆவண செய்யுமாறு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யுத்த சூழல் மாறி வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று குடியேறும்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அதிகாரசபை உதவும்.
இதன்படி வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும், இந்த வேலைத்திட்டத்தை வீடுகளைப் பெறுபவர்களின் பங்களிப்புடன் குறைந்த செலவில் செயற்படுத்தவும் வீடமைப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது என்றார்.