களனி பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் சில பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. முதலாவது மனுதாரரான இனோகா நடிசனி என்ற மாணவி தன்னை ஆண் பொலிஸ் அதிகாரியொருவர் கழுத்தில் பிடித்து தள்ளி வாகனத்தில் ஏற்றியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸ் அத்தியட்சர் கே.டீ. சோமபால, கிரிபத்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, இன்ஸ்பெக்டர் சந்தன கமகே, பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பெப்ரவரி 3 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்தனர். மாணவர்களின் கல்வீச்சின் போது சில பொலிஸார் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் இதனையடுத்து பொலிஸார் தன்னிச்சையாகச் செயற்பட்டு ஏழு மாணவர்களையும் ஒன்பது மாணவிகளையும் கைது செய்துள்ளனர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொலிஸார் இங்கு நடந்து கொண்ட முறையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். நீதியரசர்கள் என்.ஜி. அமரதுங்க, ஜெகத் பாலபட்ட பெந்தி மற்றும் சந்திரா ஏக்க நாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது. ஜூன் 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.