கப்பல் மற்றும் விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை யாழ். குடா நாட்டுக்கு கொண்டுசெல்லும் போது மெற்றிக் தொன் ஒன்றுக்கு சுமார் 75 அமெரிக்க டொலர்கள் செலவாகியது. ஏ-9 வீதி திறந்ததன் பின்னர் இத் தொகை 23 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. காங்கேசன்துறை வரை புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் இத்தொகை யை மேலும் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
ரயில்வே துறையை அபிவிருத்தி செய்து ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 92 ரயில் என்ஜின்கள் திருத்தப்பட்டு தற்போது சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் உதிரிப் பாகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம் பழைய என்ஜின்களை சீர்செய்து சேவையில் ஈடுபடுத்துவதே தமது நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்குதலின் மூலம் நான்கு வீத வருமானம் கிடைத்து வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தவும் வடக்கிற்கான சேவையை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது:- சிறந்த ரயில் சேவையை நடத்துவதற்கு தேவைப்படுகின்ற ரயில்களின் எண்ணிக்கையையும் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ரயில் மற்றும் “பவர் செட்” களின் எண்ணிக்கையையும் கோரினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் 44 பவர் செட்டுகள் உட்பட சில என்ஜின்களை அண்மைக் காலத்தில் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.