அரசாங் கத்தின் விவசாயக் கருத்திட்டமான பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ செயற்றிட்டத்துக்கு 2008, 2009 ஆகிய இரண்டு வருடங்களுக்கும் அரசாங்கம் 1850 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென விவசாய அபிவிருத்தி கமத்தொழில் சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜே. வி. பி. எம்.பி. திலகரத்ன விதானாச்சி எழுப்பி கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிசேன, உள்ளூர் விவசாயத் துறையை ஊக்குவிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
திலகரத்ன விதானாச்சி எம்.பி. தமது கேள்வியின் போது பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் விவசாய செயற்றிட்டத்தின் கீழ் காலி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஊக்குவிப்புக்காக 2008, 2009ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விபரம் கோரினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, பயிர்வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் செயற்றிட்டத்துக்கு அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் 300 மில்லியன் ரூபா ரூபாவையும் இயற்கை உர உற்பத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும் செலவிட்டது.
2009 ஆம் ஆண்டுக்கென மேற்படி செயற்றிட்டத்துக்கு அரசு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் இயற்கை உர உற்பத்திக்கென 750 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
இந்நிதி கமநல சேவைகள் திணைக்களம் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு விவசாய நிறுவனங்களுக்கூடாக அந்தந்த பகுதி பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சகல திட்டங்களும் பிரதேச செயலகங்களுக்கூடாக நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்