ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை தற்போது பிரதித் தலைவராக இருக்கும் கருஜயசூரியவுக்கு வழங்கி, தலைமைப் பதவியிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற பதவியை வழங்குவதற்கான யோசனையொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஐ.தே.க.வின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடிகள் எழுந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நெருக்கடிகள் குறித்து ஆராய கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கட்சியினுள் தோன்றியிருக்கும் நெருக்கடிகளை தீர்க்கும் வகையிலான யாப்பு மாற்றம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே இந்தக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் புதிதாக “சிரேஷ்ட தலைவர்’ என்ற பதவியை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலைமையிலேயே இந்தக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து ஆராய எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவிருக்கும் ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறானதொரு யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
எனினும், இது குறித்து காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.யிடம் கேட்ட போது தற்போதைய நிலைமையில் கட்சியின் உள்ளார்ந்த விடயங்கள் பற்றி எதுவும் கூற முடியாதெனத் தெரிவித்ததுடன் கட்சியின் தற்போதைய நடைமுறையில் சில திருத்தங்களுடனான அறிக்கை எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் கூறினார். இதேநேரம், சிரேஷ்ட தலைவர் என்ற பதவியினது பெயர் சிலவேளைகளில் பிரதான தலைவர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படலாமென்றும் அதற்கு போதியளவு அதிகாரம் இருக்குமென்பது சந்தேகமே என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.