March

March

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தீக்குளித்து தற்கொலை

srilanka.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப்பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

‘வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர யாரும் முன்வருவதில்லை. எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள்’ உதயராஜா சிறி ரெலொ நேர்காணல் : த ஜெயபாலன்

Uthayarajah_Sri_TELOபாலசிங்கம் உதயராஜா – சிறி ரெலோவின் செயலாளர் நாயகம். ஜரோப்பாவிலிருந்து 2004ல் மீண்டும் இலங்கை சென்று சிறீ ரெலோவை ஆரம்பித்தார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: சிறீ ரெலோவை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?

உதயன்: புலிகள் ரிஎன்ஏ யிலுள்ள அமைப்புகளை தனது ஆதரவு அமைப்பாக செயற்படுத்தத் தொடங்கியபோது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துப் போய்விட்டார்கள். இது ரிஎன்ஏயிலுள்ள எல்லா அமைப்பினர்க்கும் பொருந்தும். ரெலோ ஈபிஆர்எல்எவ் ரியுஎல்எவ் போன்ற தலைவர்களை கூப்பிட்டு புலிகள் கதைத்துவிட்டு கடந்தகால பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் மறைத்துவிட்டு தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு நாங்கள் – ரெலோவில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- ஒன்றாக தனித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகள் தமக்கு ஆதரவளித்த இயக்கங்களை தமக்காக செயற்பட வைத்துவிட்டனர். எமது தலைவரையும் 300 போராளிகளையும் கொன்ற புலிகள் தற்போதய தலைமையை கூப்பிட்டு கதைத்து தமக்காக பேச வைத்துள்ளார்கள். இதேபோல ஈபிஆர்எல்எவ் இலும் நடந்துள்ளது.

நாங்கள் ரெலோவின் தனித்துவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்காகவும் சிறீ ரெலோவை ஆரம்பித்தோம். இதேபோல நாபா ஈபிஆர்எல்எப் உருவாக்கப்பட்டுளளது.

தேசம்நெற்: இப்போது உங்கள் சிறீ ரெலோவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எங்கெங்கே உங்கள் அலுவலகங்கள் செயற்ப்படுகிறது?

உதயன்: முழுநேர அங்கத்தவர்களாக 250 பேர் மட்டிலும் வட – கிழக்கு மாகாணங்கள் எல்லாவற்றிலம் செயற்ப்படுகின்றோம்.

தேசம்நெற்: உங்களுக்கான பாதுகாப்பு விடயங்களை யார் செய்து கொள்கிறார்கள்?

உதயன்: எல்லா முகாம்களுக்கும் பொலீசார் பாதுகாப்பு தருகிறார்கள் வவுனியாவில் யாழ்பாணத்தில் மட்டக்களப்பில் கொழும்பிலும் பொலீஸ் பாதுகாப்பு அரசினால் தரப்பட்டுள்ளது.

தேசம்நெற்: இன்று இரண்டு ரெலோ இயங்குகிறது. ஒன்று புலிகளுடனும் மற்றையது அரசடனும் சேர்ந்து இயங்குகிறது. இதில் என்ன தனித்துவம் கொள்கை உள்ளது?

உதயன்: ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் ரெலோ என்று இருந்தால் கூட நல்லது ஆனால் அப்படி இல்லை அவர்கள் பல காலமாக ரெலோ என்று அறிக்கை விடுவதில்லை அவர்கள் புலி சார்பான பிரச்சாரங்களையே செய்கிறார்கள்.

தேசம்நெற்: இன்றைய காலத்தில் அப்படி ஒரு பிரச்சாரம் தேவையா? ரெலோ ஈபிஆர்எல்எப் என்று கட்சி அரசியல் தேவையா? மக்கள் தேவைகள் பற்றி மக்கள் சார் அரசியல் தானே பேச வேண்டும். ஏன் நீங்கள் கட்சி அரசியல் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உதயன்: மக்கள் கட்சி என்று ஒன்று இல்லையே. புலிகள் தாங்களும் மாவீரர்களும் பற்றித்தான் கதைக்கிறார்களே அல்லாமல் இதில் மக்கள் சம்பந்தப்படவில்லை. மக்கள் சார்ந்த நடவடிக்கைகள் என்று புலிகள் சொல்வதற்கு எதுவுமில்லை. புலிகள் கடற்புலிகள் ஆகாயப் புலிகள் என்று சொல்லுகினமே தவிர மக்களின் தேவைக்கான புலிகள் என்று ஒன்று இல்லைத்தானே?

புலிகளால் பாதிக்கப்பட்டோம் என்பது இரண்டாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் என்று யார் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் என்ன மக்கள் வேலைகள் செய்கிறீர்கள்? மக்கள் சார்பான என்ன கொள்கைகள் வைத்திருக்கிறீர்கள்? மக்கள் தொடர்பாக என்ன சேவைகள் செயற்ப்பாடுகள் செய்கின்றீர்கள்?

உதயன்: நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்கான சேவைகளை செய்யும் பணியாளர்களாக இருக்கிறோம்.

தேசம்நெற்: அதைத்தான் கேட்கிறேன். நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

உதயன்: இன்று புலிகள் பிரதேசத்திலிருந்து வரும் மக்களுக்கு என்ன செய்யலாம். எப்படி உதவலாம் என்று அரசுடன் பேசுகிறோம். இது பற்றி அரச தரப்பினரிடமும் மற்றவர்களிடமும் பேசுகிறோம்.

வன்னியிலிருந்து வரும் மக்களின் பாதுகாப்பும், அப்படி வந்து சேர்ந்த மக்களின் குடும்பங்கள் பிரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஒன்றுபடுத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம்.

உதாரணமாக வன்னியிலிருந்து தப்பி வந்த மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் பட்சத்தில் அச்செய்தி அறிந்து ஏனையவர்களும் புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதிகளை மீறி வெளியேறுவர்.

தேசம்நெற்: ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வரும் மக்களை ஆயுதக் குழுக்கள் துன்புறுத்துகிறார்கள் என்று பல்வேறு செய்திகள் வெளிவருகிறது.

உதயன்: ஓம்

தேசம்நெற்: ஆப்படியாயின் வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் யாரை நம்புவது? புலிகளையா? அரசாங்கத்தையா? ஆயுதக் குழுக்களையா? எல்லோரும் மக்களுக்கு எதிராகத்தானே செயற்ப்படுகிறார்கள்?

உதயன்: அது சரி அப்படியான நிலையில்த்தான் வன்னி மக்கள் இருக்கிறார்கள். உடைத்துக் கொண்டு போவதா அல்லது இப்படியே இருந்து சாவதா? இங்கே வவுனியாவில் ஆட்களை கடத்துகிறார்கள் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்தி அவர்களை அடையத்தான் செய்யும்.

தேசம்நெற்: இவற்றை தடுத்து நிறுத்த நீங்கள் சிறீ ரெலோ அல்லது மற்ற அமைப்புக்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

உதயன்: மற்றவர்களைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால் புலிகள் வன்னியில் மோசமான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் வன்னியில் இராணுவம் பெண்களை கற்பழிக்கிறது கொடுமை செய்கிறது என பிரச்சாரம் செய்கிறார்கள்.

தேசம்நெற்: அண்மையில் உங்கள் அமைப்பு உறுப்பினர்கள் கூட கொல்லப்பட்டு உள்ளனர் அல்லவா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?

உதயன்: இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைப்புடன் கதைக்கப்பட்டுள்ளது அதற்கு பதில் கிடைக்குமென நம்பவில்லை. மக்களுக்கு தெரியும் யாரால் செய்யப்பட்டுள்ளது என்று.

தேசம்நெற்: ஒரு அரசியல் குழுவாக செயற்ப்படும் உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு சாதாரண மகனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

உதயன்: நான் இதைத்தான் அரசுக்கும் எடுத்து சொல்லியுள்ளேன்.

தேசம்நெற்: அப்படியாயின் நீங்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சொல்கின்றீர்கள்?

உதயன்: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே புலிகளின் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற முற்படுவர் என்பதே எனது கருத்து.

தேசம்நெற்: இப்போது  உங்கள் அமைப்பின் மீதும் மக்கள் விரோதச் செயற்ப்பாடுகள் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதே?

உதயன்: கடந்த வாரம் நெருப்பு இணையத் தளத்தில் வந்த செய்தியும் இது பற்றியும் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். மக்களைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் தெரியும் யார் இதை செய்திருக்கின்றார்கள் என்று.

தேசம்நெற்: தற்போது வவுனியாவில் உங்களுக்கும் புளொட்டுக்கும் பல முரண்பாடுகள் வளர்ந்துள்ளது. அண்மையில் உங்களுடைய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டும் உள்ளனர். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உதயன்: இது பற்றி புளோட் சித்தார்த்தனுடன் கதைத்து உள்ளோம். அவர் இது தொடர்பாக தனது தோழர்களுடன் கதைத்து விட்டு பதில் தருவதாக கூறியுள்ளார். அப்படித் தவறு நடைபெற்றால் அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசம்நெற்: நீங்கள் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து செயற்ப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

உதயன்: ஈபிடிபி யுடன் போதிய நட்புறவு உள்ளது. அவர்கள் ஈபிடிபி நாங்கள் ரெலோ.

தேசம்நெற்: ஈபிடிபியுடன் சேர்ந்து இயங்குவது வேலை செய்வது தேர்தல்களை ஒன்றாக சந்திப்பது சம்பந்தமான வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது சம்பந்தமாக பேசுகிறோம். எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேசி முடிவுகள் எடுப்போம்.

தேசம்நெற்: உங்கள் அமைப்பு சார்பான பொறுப்புக்களில் உள்ளவர்கள் சம்பந்தமாக சொல்ல முடியுமா?

உதயன்: ஒழுங்கமைப்பாளரும் பேச்சாளரும் திரு அபுயூசப் இங்கு என்னுடன் உள்ளார்

தேசம்நெற்: எனைய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

உதயன்: வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு அகிலன்
யாழ் மாவட்டப் பொறுப்பாளர் திரு தாஸ்
திருகோணமலைப் பொறுப்பாளர் திரு பரமேஸ்வரன்
மட்டக்களப்பு பொறுப்பாளர் திரு நாதன்
மன்னார் பொறுப்பாளர் திரு சுதன்

தேசம்நெற்: எப்ப அடுத்த தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்?

தேசம்நெற்: நீங்களும் உங்கள் கட்சியும் தேர்தலில் பங்கெடுப்பீர்களா?

உதயன்:  நிச்சயமாக பங்கேடுப்போம். கூட்டாக செயற்ப்படுவது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். முடிவு எடுக்கவில்லை. மற்றய கட்சிகளுடனும் அரசடனும் கதைத்துள்ளோம்.

தேசம்நெற்: உங்கள் சிறீரெலோ கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளை ஏற்ப்படுத்தியுள்ளது. கிழக்கில் கருணா – பிள்ளையான் மற்றும் டக்ளஸ் என்று பிரித்து அரச பிரித்தாளும் தந்திரத்தை வைத்திருக்கிறது. இந்த சிறீரெலோவைக் கூட உருவாக்கிய விடயம் அப்படித்தான் என்று பார்க்கப்பட முடியும்தானே!

உதயன்: நிச்சயமாக இல்லை. நாங்கள் மட்டுமல்ல மலையக கட்சிகள், ஈபிஆர்எல்எப் போன்ற பல கட்சிகள் இப்படித்தான் உடைந்துள்ளது. இது அரசு உருவாக்குகிறது என்று சொல்ல முடியாது.

தேசம்நெற்: நீங்கள் சிறீரெலோ அரசிடம் அரசியல்த் தீர்வை முன்வைக்குமாறு அழுத்தங்களை கொடுக்கிறீர்களா?

உதயன்: நிச்சயமாக அது மட்டுமல்ல ஜனநாயக நடைமுறைகளையும் செயற்ப்படுத்துமாறும் கேட்டுள்ளோம்.

தேசம்நெற்: இந்த அரசியல்த் தீர்வு சம்பந்தமாக அரசு எல்லா கட்சிகளையும் கூப்பிட்டு ஒரு சந்திப்பை நடாத்தியதா?

உதயன்: இல்லை நடாத்துவதாக சொல்லியுள்ளது.

தேசம்நெற்: வன்னியிலிருந்து வெளிவரும் தமிழ் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசு ஏன் தன்னுடன் இயங்கும் தமிழ் அமைப்புகளிடம் கூடிப் பேசவில்லை?

உதயன்: இல்லை புலிகள் கட்டவிழ்த்து விடும் பொய்ப் பிரச்சாரங்கள் அதிகம். பெண்களைக் காணவில்லை, கொலை செய்யப்பட்டு உள்ளனர் இப்படி பல. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது உண்மை.

தேசம்நெற்: ஆனால் அரசாங்கம் கிட்டத்தட்ட நாஜி முகாம்கள் வைத்திருந்தது போன்று ஒன்றை திட்டமிட்டு செயற்ப்படுத்துகிறது. இதில் குடும்பங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. உறவினர்கள் பார்வையிடவும் தடை விதித்து இருக்கிறது.

உதயன்: புலிகளும் மக்களோடு மக்ளாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை அடையாளப்படுத்துவது சம்பந்தமாகவும் பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் புலிகளின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே சில பெற்றோர்களையும் பிள்ளைகளையும் இராணுவம் பிரித்து வைத்துள்ளது. புலிகளில் இப்படியான பல நிலைமைகள் உண்டு.

தேசம்நெற்: தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டுமுன்னணி உருவாக்கும் வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது பற்றி எல்லோரிடமும் கதைத்துள்ளோம். புளொட் சித்தார்த்தன், கூட்டணி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப், கிழக்கு தலைவர்கள் எல்லோரிடமும் கதைத்த போதும் யாரும் முழுமனதுடன் செயற்ப்பட முன்வருவதாக தெரியவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் அமைப்புக்களின் திட்டங்கள் பற்றி கதைக்கிறார்களே அன்றி ஒன்னிணைவு பற்றி கதைக்கிறார்கள் இல்லை.

தேசம்நெற்: மக்கள் நலன்தான் இந்தக் கட்சிகளுக்கு முக்கியம் என்றால் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம் அல்லவா? ஏன் ஒன்று சேர முடியாதுள்ளது?

உதயன்: இதற்கு யாரும் முன்வருவதில்லை என்றே சொல்லலாம். எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள் எம்மிடையே ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாகும். இன்றய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும். பல விடயங்களைச் சாதிக்கலாம்.

தேசம்நெற்: இந்த மகிந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ் யுத்த முடிவில் ஒரு அரசியல்த் தீர்வை முன்வைக்கும் என்று நம்புகிறீர்களா?

உதயன்: எல்லா தரப்பினரும் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாமும் எதிர்பார்கிறோம்.

இன்று சர்வதேச நீர்வள தினம் (world water day) – புன்னியாமீன்

22-031.jpgஇன்று மார்ச் 22  றியோ டி ஜெனீரோவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும்,  சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி,  ஆறு, குளம்,  ஓடைகளும் இல்லை. இதன் காரணமhகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய் விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும் வாழ்விலும் இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை,  நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல்,  வாய்ப்புக்களைப் பகிர்தல், (Transboundary waters; Sharing water, Sharing opportunities)  என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி,  சமாதானம்,  பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இத் தொனிப்பொருளின் நோக்கமாகும்.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி,  சிந்து நதி, யூப்பிரடிஸ்,  தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை.   உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30சதவீதம் நிலக்கீழ் நீர். 3சதவீதம் நன்னீர் ஏரிகளும்,  நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.

நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை,  சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தகாமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும். 

வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு,  றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. றியோ – டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை,  விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயற்படுவோம்!

நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு, 1994ல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.

உலக வானிலை அவதான அமைப்பும் ; (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஸ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளுர்ப் பாவணைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்.

இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர,  மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்றிட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச்சிக்கனம்,  நீர்த் தூய்மை,  நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறைகாட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.

இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.

தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.

நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும்,  ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம்,  அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.  

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப,  சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகிவருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும்,  எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

எனவே,  நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெறஇ பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இன்றைய தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

அமைச்சர் டக்ளசுடன் தொடர்புகொள்ள…

minister.jpgதங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வேளையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் 011 2503467 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் பல்வேறு நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்களைக் கவனிக்கவும் மக்கள் நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவுமென கடந்த ஒரு வாரகாலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தங்கியுள்ள நிலையில் மேற்படி தொலைபேசி ஊடாக நேரடியாக அமைச்சருடனோ அல்லது அவரது உதவியாளருடனோ நேரடியாக தொடர்புகொண்டு தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை எவ்வேளையிலும் பொதுமக்கள் அறியத்தரலாம்.

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றில் காவி உடை அனுமதிக்கப்படும்போது பாடசாலைகளில் பர்தாவுக்கு தடைவிதிப்பது நியாயமா?

sri-lanka-muslim-students.jpgபாராளு மன்றத்தில் காவி உடைக்கு அனுமதி வழங்கப்படும் போது பாடசாலைகளில் பர்தா உடைக்கு தடைவிதிப்பது நியாயமா என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் அம்ஜான் உம்மா பர்தா உடையுடன் வருகிறார். கண்ணியமிக்க தேரர்கள் காவி உடையுடன் வருகின்றார்கள். அறிவாளிகளை உருவாக்கும் பள்ளியில் மட்டும் பர்தா உடைக்கு அனுமதி மறுக்கப்படுவது சரிதானா என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மாணவிகளின் இஸ்லாமியச் சீருடைக்கு மேல்மாகாணத்தில் மட்டுமின்றி திருமலை மாவட்டத்திலும் தடைவிதிப்பு தொடர்கிறது. அன்று பதுளையில் ஆரம்பித்த இந்தத்தடைவிதிப்பு இன்று கொழும்பு திருமலை வரை சென்று விட்டது. அன்று யாரோ, எதற்கோ துகிலுரிந்தார்கள் என்பது வரலாறு. இன்று பள்ளி முதல்வர்களின் பணிப்பில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகள் களையப்படுகின்றன. அன்றும் இன்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்கள மாணவர்கள் தம் வழக்கமான ஆடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்த நிலையில் பாடசாலைவருவதைத் தடுக்கும் அதிபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தந்தாலும், ஆங்காங்கே காணப்படும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும் போதே கல்வி அமைச்சரின் அறிவிப்பு பயனுள்ளதாய் அமையும் என்பது சங்கத்தின் கருத்தாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.தே.க தலைமை பதவியிலிருந்து ரணிலை வெளியேற்றுவது உறுதி? – கட்சி வட்டாரம் தகவல்

ranil-wickramasinghe.jpgஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிச்சயமாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ. தே. க.வின் செயற் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி அதற்குப் பதிலாக கரு ஜயசூரியவை நியமிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இதற்கு செயற்குழுவின் இன்னொரு சாரார் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எஸ். பி. திசாநாய க்க, அல்லது ருக்மன் சேனநாயக்காவை தலைவராக நியமித்து சஜித் பிரேமதாசவை கட்சியின் மிக முக்கியமான பதவிக்கு நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தான் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பதவியில் இருந்து கொண்டு தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு இணங்கியிருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மீளாய்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினரிடமே இந்த முடிவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கட்சியின் யாப்பின் பிரகாரம் செயற்குழு மாதத்தில் ஒருமுறையே கூட வேண்டும். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு செயற்குழுக் கூட்டம் நாளை 23 ஆம் திகதியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிகிறது.

கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அரசுக்கு வைகோ கண்டனம்

kachchativu.gif’’இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நமக்கு உரிமையான கச்சத்தீவு பகுதியை புனிதப் பகுதியாக அறிவிக்க இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.  இப்பிரச்சினையை இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் எழுப்பியுள்ளது.

பாரம்பரிய ரீதியாகவும், வரலாற்று அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் இந்தியாவுக்கு  சொந்தமான கச்சத் தீவை புனித பகுதியாக இலங்கை அரசு அறிவிக்கக் கூறுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்தியாவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பு குறித்து பேசுவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது’’ என்று மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்

மனிதாபிமான நெருக்கடியை கையாள ஐ.சி.ஆர்.சி.க்கு 30 இலட்சம் யூரோ வழங்குகிறது ஐரோப்பிய ஆணைக்குழு

160309.jpgஇலங் கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவும் நோக்கத்துடன் அதற்கு 30 இலட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மோதல் பகுதியில் சிக்குண்டு பலியாகிவருகின்ற நிலையில் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஷெல் வீச்சினால் மட்டுமன்றி உணவு, நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் இந் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி ஆணையாளர் லூயிஸ் மக்கேல் தெரிவித்திருக்கிறார்.

இப்பகுதிக்கு சிறியளவான மனிதாபிமான உதவியே அனுமதிக்கப்படுகிறது. அங்கு மனித நெருக்கடியை தவிர்ப்பதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கமே மோதல் பகுதியில் மனிதாபிமான பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு பணியாற்றிவருகின்றது. அவர்கள் ஆபத்தான சூழ் நிலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உயிரைப்பாதுகாப்பதற்கான உதவி வழங்குவதுடன் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்களை வெளியேற்றி வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொறுப்புடன் பொதுமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷெல் தாக்குதலை நிறுத்தும் அதேநேரம் மனிதாபிமான ரீதியில் தேவையான உணவு, மற்றும் மருந்துகளை அப்பகுதிக்கு கொண்டு செல்லவும் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியேறுவதற்கு உதவியளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ஏவுகணை விநியோகம்; ஒப்புக்கொண்டது ரஷ்யா

iran.jpgஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு” என குறிப்பிட்டிருந்தார்.

“ஈரான் அரசால் அன்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதிநவீன எஸ். 300 ரக ஏவுகணையை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது இது குறித்து ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிடுகையில், “எஸ். 300 ஏவுகணையை ஈரானுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை விநியோகிக்கவில்லை இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.

படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய யோசித்து வருகிறோம் என்றார். ஈரானுக்கு இந்த ஏவுகணையை விநியோகம் செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.