இலங் கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவும் நோக்கத்துடன் அதற்கு 30 இலட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மோதல் பகுதியில் சிக்குண்டு பலியாகிவருகின்ற நிலையில் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஷெல் வீச்சினால் மட்டுமன்றி உணவு, நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் இந் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி ஆணையாளர் லூயிஸ் மக்கேல் தெரிவித்திருக்கிறார்.
இப்பகுதிக்கு சிறியளவான மனிதாபிமான உதவியே அனுமதிக்கப்படுகிறது. அங்கு மனித நெருக்கடியை தவிர்ப்பதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கமே மோதல் பகுதியில் மனிதாபிமான பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு பணியாற்றிவருகின்றது. அவர்கள் ஆபத்தான சூழ் நிலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உயிரைப்பாதுகாப்பதற்கான உதவி வழங்குவதுடன் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்களை வெளியேற்றி வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொறுப்புடன் பொதுமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷெல் தாக்குதலை நிறுத்தும் அதேநேரம் மனிதாபிமான ரீதியில் தேவையான உணவு, மற்றும் மருந்துகளை அப்பகுதிக்கு கொண்டு செல்லவும் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியேறுவதற்கு உதவியளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.