44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *