ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிச்சயமாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ. தே. க.வின் செயற் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி அதற்குப் பதிலாக கரு ஜயசூரியவை நியமிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இதற்கு செயற்குழுவின் இன்னொரு சாரார் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எஸ். பி. திசாநாய க்க, அல்லது ருக்மன் சேனநாயக்காவை தலைவராக நியமித்து சஜித் பிரேமதாசவை கட்சியின் மிக முக்கியமான பதவிக்கு நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தான் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பதவியில் இருந்து கொண்டு தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு இணங்கியிருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மீளாய்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினரிடமே இந்த முடிவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கட்சியின் யாப்பின் பிரகாரம் செயற்குழு மாதத்தில் ஒருமுறையே கூட வேண்டும். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு செயற்குழுக் கூட்டம் நாளை 23 ஆம் திகதியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிகிறது.