March

March

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

kothamangalam-balasundharam.jpgஈழத் தமிழர்களை காக்கக்கோரி மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.

கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.  இன்று (22.03.09) மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டலுக்கு மிரட்டல்

மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டல் ஒன்றிற்கு இ மெயில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அல் குவைதா இயக்கத்தின் பெயரில் வந்த இந்த மிரட்டல் இமெயிலில், மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.பி.வாஸ் குணவர்தனவின் வழி நடத்தலில் வர்ஷாவின் கொலை விசாரணை நடைபெறுகிறது

Regie_Varsaதிரு கோணமலை மாணவி வர்ஷாவின் கொலை தொடர்பான விசாரணைகள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்த்தனவின் வழி நடத்தலில், மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை பொலிஸ் தலைமைக்காரியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார்.  இலங்கைப் பொலிஸ் சேவையின் 145 ஆவது வருட நிறைவைக்குறிக்கும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியின் கொலை இடம்பெற்று முப்பத்தாறு மணித்தியாலங்களுக்குள், சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்தனவின் தலைமையில் பொலிஸ் குழு எடுத்த தீவிர நடவடிக்கையினால் இது சாத்தியமாயிற்று என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

“வணங்கா மண்’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் – கடற்படை எச்சரிக்கை

Vanni_Missionவன்னிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வரும் “வணங்கா மண்’ என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமென இலங்கை கடற்படை எச்சரித்துள்ளது.

வன்னியில் படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் வழங்கும் சுமார் 2 ஆயிரம் மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களுடன் “வணங்காமண்’ என்ற கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரிட்டனிலிருந்து இலங்கையை நோக்கி புறப்படவுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கொடியுடன் இந்த கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானோர் வன்னி மக்களுக்கென்ற பேரில் இந்த உணவுப்பொருட்களை விடுதலைப்புலிகளுக்கு கொண்டுவரமுற்படுவதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  அத்துடன் இந்த கப்பலானது இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் எதிர்ப்பையும் மீறி “வணங்காமண்’ என்ற அந்த கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு செல்ல பிரிட்டனைச் சேர்ந்த தமிழமைப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதேநேரம், அந்த கப்பலின் உரிமையாளர் குறித்த விபரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வினோ நோகராதலிங்கத்தின் கூற்று தொடர்பில் த.தே.கூ அதிருப்தி

thangeswary.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்  அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். வினோநோகராதலிங்கத்தின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வாழும் வன்னிப் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பானதும், அமைதியானதுமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக வினோநோகராதலிங்கம் தெரிவித்திருந்தார். மேலும் மக்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் பூரண கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை எவ்வித கருத்து வேறுபாடுகளோ பிரிவினைகளோ ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரவேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும். அது தொடருமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் கூட்டமைப்பின் கருத்திற்கு முரணாக வினோ எம்.பி.

l-yaappa-abayawardana.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து உலகளவில் பிரசாரத்தை முன்னெடுக்கையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான வினோநோகராதலிங்கம் உண்மையை சுதந்திரமாக தெரிவித்ததையிட்டு நன்றி கூறுவதாக ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டுக்கும் அரசுக்கும் அபகீர்த்தியையும் அவமரியாதையையும் ஏற்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்து பொதுமக்கள் தங்கியுள்ள, குறிப்பாக கதிர்காமர் கிராமம் உட்பட முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பார்வையிட்டதன் பின்னரே அவர் பாராளுமன்றத்தில் இவ்வாறு தனது சுதந்திரமான கருத்தைத் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசுவதற்குக் காரணம் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுள்ள மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி பராமரிப்பதேயாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு மற்றும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் சென்று அரசுக்கும் இராணுவத்துக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வினோநோகராதலிங்கம் முகாம்களுக்குச் சென்று அரசு மேற்கொள்ளும் நலன்புரி சேவைகள் உட்பட ஏனையவற்றை பரிசீலித்து அரசுக்கு சார்பாக உண்மையை சுதந்திரமாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசாங்கம் செயற்படுவதாக களங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் பொய்ப்பிரசாரத்தை முறியடிப்பதற்கு இவரது கூற்றை உலகுக்கு எம்மால் முன்வைக்க முடியும். இதையிட்டு அவருக்கு நன்றிகள்.

இதேவேளை, இலங்கையிலிருந்து சென்ற சிலர் ஜெனீவாவில் தமிழ் மக்களின் உரிமையை அரசாங்கம் மறுப்பதாக அங்கு மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றி கூறியுள்ளனர். இதையிட்டு கவலையடைகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே உண்மையை உணர்ந்து அரசுக்கு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவர்கள் சென்று ஆர்பாட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

இதனால் நாட்டுக்கு மட்டுமன்றி அரசு மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு இழுக்கையும் அவமரியாதையையும் ஏற்படுத்துமென்பதால் நாம் கவலையடைகின்றோம் என்றார்.

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

navanethem.jpgஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த 17 ஆம் திகதி நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் பிரசண்டா, ஐ.நா. அலுவலர்கள், மனித உரிமைப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நேபாளம் தொடர்பாக தனது பிந்திய அறிக்கையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், “நேபாளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முடியாட்சிக்குப் பதிலாக அங்கு குடியாட்சி மலர்ந்துள்ளது. ஆயினும் சமாதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விடயத்தில் சவால்கள் உள்ளன. மனித உரிமைகள் விவகாரத்தின் தனது ஈடுபாடுகளை அமுல்படுத்துவதற்குரிய வரலாற்று ரீதியான வாய்ப்பு நேபாளத்திற்கு கிட்டியுள்ளது’ என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். 

நாடாளுமன்ற உரை தொடர்பான சர்ச்சைக்கு வினோ மறுப்பு

vinonodaralingam.bmpகடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தினால் ஆற்றப்பட்ட உரைக்குப் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வினோநோகராதலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

vino-lt.jpg

பொலிஸ் பதிவு நேற்று இரத்து இன்று மேற்கொள்ளப்படும்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

ranjeth-gunasekara.jpgமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பொலிஸ் பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டதோடு, இப்பதிவு இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் 21ஆம் திகதி சனிக்கிழமையும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் பேரில் செயற்பட்ட மக்கள் நேற்று தாம் தங்கியிருந்த பகுதிகளுக்கான பொலிஸ் நிலையங்களுக்கு சென்று பதிவுகளை மேற்கொள்ளவிருந்தனர்.

ஆனால் பொலிஸ் நிலையங்களிலோ பதிவுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகரவிடம் கேட்டபோது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டபோதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் இப்பதிவு ரத்துச் செய்யப்பட்டது. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டபடி பதிவுகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஐந்து வருடங்களுக்குள் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண் டும்.

இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், மக்கள் தமது அடையாளயத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை கொண்டுச் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். 

பிரபாகரன்தான் போரை முன்னின்று நடத்துகிறார் – பா.நடேசன்

nadesan.jpgபிரபாகரன் எங்கும் ஓடவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?

நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.

தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.

கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?

நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.

இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?

நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.

இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.