March

March

புலிகளின் ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்

wanni_pic.jpgகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவரினால் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை தானே உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் படையினர் பெற்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி முதல் 50 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

_mullai_1.jpgகடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த சனிக்கிழமை வரையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 50,000 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து 1164 பொது மக்களோடு மொத்தம் 50 ஆயிரம் பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் வந்து சோந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவும் வைத்திய சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 

புதுமாத்தளன் பிரதேசத்தில் காயமுற்ற 494 பேர் நேற்று புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

navy_rescue_civil.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருதரப்பினரதும் தாக்குதலால் காயமடைந்த 494 பேர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் புல்மோட்டை இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் ஏற்கனவே அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் 13 ஆவது முறையாக ஏற்றிவரப்பட்ட இக்குழுவில் 152 ஆண்களும் 216 பெண்களும் 126 சிறுவர்களும் அடங்கியிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சரக்கு விமானம்

japan-fli.jpgஜப்பானில் தரையிறங்கிய சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பலியாகியுள்ளனர். குவாங்ஸொயுவிலிருந்து நரிடா சர்வதேச விமான நிலையத்தை திங்கட்கிழமை காலை வந்தடைந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தையடுத்து ஜப்பானின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் மேற்படி விமான நிலையம் மூடப்பட்டது. அந்த விமான நிலையத்துக்கான பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

த.தே.கூட்டமைப்பு – ஜனாதிபதி எதிர்வரும் வியாழனன்று சந்திப்பு

tna.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக இதற்கான அழைப்பை இன்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது.

அலரி மாளிகையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்றும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் “நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்”  என்று கூறினார்.

காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் – “சண்டே ரைம்ஸ்’

pullmottaiindiadoctors1.jpgஇலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.  இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு  அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை நிலைவரம் தொடர்பாக விவாதம்

parliament-uk.jpgஇலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகளில் கடும் கவலை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, யுத்தநிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொது நலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி.ஜோயன் ரியான் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான “சண்டேரைம்ஸ்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

வருண்தான் வேட்பாளர் – பாஜக

20-varun-ganthi.jpgபிலிபித் தொகுதியில் வருண் காந்திதான் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பபீர் புஞ்ச் கூறுகையில், வருண் காந்தியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவர்தான் பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கும், சோனியா காந்திக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள்தான், வருண் காந்தி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக முடிவெடுக்க காரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வேட்பாளரை மாற்றுங்கள் என்று கூற தேர்தல் ஆணையத்திற்கு யார் அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை நாங்கள் நிராகரித்து விட்டோம்.

சஞ்சய் தத் போன்ற தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும். வருண் காந்திதான் எங்களது மதிப்புக்குரிய வேட்பாளர். இதுகுறித்து பாஜக தலைமை முறைப்படி அறிக்கை ஒன்றை வெளியிடும். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும் உத்தேசத்தில் வருண் காந்தி இல்லை என்று கூறப்படுகிறது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து சம்பியன்!

cricket_women_worldcup_.jpg மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி சம்பியனாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பறியிருப்பது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1973 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது 16 ஆண்டுகளின் பின்னர் அவ்வணி மீண்டும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்குப் பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. 
 

வருண் கீதையை சரியாக படிக்க முயற்சிக்க வேண்டும் – பிரியங்கா

23-priyanka.jpgவருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.

ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.

வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.