இலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.
அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.
“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.
ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.
புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.