மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி சம்பியனாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பறியிருப்பது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1973 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது 16 ஆண்டுகளின் பின்னர் அவ்வணி மீண்டும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்குப் பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.