March

March

‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி திட்டத்துக்கு யாழ். தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை – ஜனாதிபதி

yaal-deevi.jpg‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு யாழ் தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை நாதமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் தேவி வெறுமனே ரயில் சேவையாக மட்டுமன்றி இனங்களுக்கிடையில் உறவின் தூதுவனாகப் பயணிப்பது உறுதியெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கிற் கானரயில் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையிலான செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி வடக்கின் பனையும் தெற்கின் தென்னையும் மீண்டும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. நாம் அனைவரும் இணைந்து இந்த சகோதரத்துவப் பிணைப்பை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் தெரிவித்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான “தெற்கின் நண்பன்” கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியும் பிரபல சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனும் இணைந்து இத்திட்டத்திற்கான இணையத்தளத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அமைச்சர்கள் டளஸ் அழகப் பெரும, டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மதத் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், கலைத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

படையினர் வடக்கை மீட்ட பின்னர் அந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி? என்ற கேள்வியையே பலரும் இந்நாட்களில் எழுப்புகின்றனர். இதனை வெறுமனே பார்ப்பதை விட இதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து அதற்கு ஒரு வழிமுறையையும் மேற்கொண்டோம். இதனோடு மக்களின் மனதை வெற்றிகொள்வது முக்கியம் என்பதாலேயே யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை ஆரம்பித்து வடக்கின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பல வருடங்களுக்கு முன்பு நாம் யாழ் தேவியில் பயணித்தோம், அன்று யாழ் தேவியின் ஒலி நாதம் ஆனந்தத்தை தந்தது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். அது ரயிலின் ஒலியன்று, மனித மனங்களின் இதயத்துடிப்பு என்றால் பொருத்தும்.

யாழ் செல்லும் அரச ஊழியர்கள் தமது விடுமுறைக்கு இங்கு வந்து விட்டு மீள யாழ் செல்வது இந்த யாழ் தேவியில் தான். அரச நிர்வாகம் போன்று யாழ்தேவியும் முழு அரச சேவையின் அடையாளமாகத் திகழ்ந்தது. இதனால்தான் புலிகள் இனங்களைப் பலிகொள்ள யாழ் தேவி மீது தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் புலிகள் யாழ்தேவியின் ஊடான சகோதரத்துவத்தையே சீர்குலைத்தனர். முருங்கனில் தாக்குதல் நடத்தினர், அதில் 11 ரயில் பெட்டிகள் சேதமாயின.

அதற்கடுத்து 1986 இல் பரந்தனில் யாழ்தேவி மீது தாக்குதல் நடத்தினர். மூன்றாவது தடவையாகவும் ஓமந்தையில் வைத்து தாக்குதல் நடத்தினர். புளியங்குளத்திற்கும் வவுனியாவுக்குமிடையில் ரயிலில் குண்டு வைத்தனர். இத்தனை தாக்குதல்களை நடத்தியும் இனங்களுக்கிடை யிலான நட்புறவை முறிக்க முடியாமற்போனது.

1987 இல் வவுனியா- கிளிநொச்சி ரயில் பாதை தகர்க்கப்பட்டது. இதனையும் நாம் புனரமைத்தோம் யாழ்தேவி பயணிக்கும் வரை நாட்டைப் பிளவு படுத்த முடியாது என எண்ணிய புலிகள் அடுத்தடுத்து அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் 1990 இல் யாழ் தேவியின் சேவை முற்றாக நிறுத்தப்பட்டது.

புலிகளால் நாசமாக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைக்க அரசாங்கத்துக்கு 700மில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டது. தற்போது யாழ் புதிய ரயில் சேவையை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் 28 ரயில் நிலையங்களை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. யாழ் ரயில் நிலையத்தை நிர்மாணிக்க நாம் நிதி செலவிடவுள்ளோம். சகல ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கப் பெருமளவு நிதி தேவைப்படுகிறது. சகல மக்களும் இதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

பயங்கரவாதிகள் அழிவைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் மக்களைக் கட்டியெழுப்ப முயல்கின்றோம். பயங்கரவாதத் திற்கு எதிரான எமது நடவடிக் கைகளுக்கு சீனா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் என பல நாடுகள் எமக்கு உதவுகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்பவும் உதவ முன்வந்துள்ளன.

யாழ். ரயில் சேவையைக் கட்டியெழுப்ப நான் எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்கின்றேன். ஜனாதிபதியின் செயலாளரும் செயலகப் பணியாளர்களும் அவர்களது பங்களிப்பை வழங்க முன்வந்து ள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்ப, இனங்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டியெழுப்ப விரும்பும் நல் மனம் படைத்தோர் தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.யாழ் தேவி இனப்பாகுபாட்டை சுமக்கவில்லை. வடக்கு தெற்கின் உறவுப் பாலமாக அது அமையும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ எனவும் ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஊடக அடையாள அட்டையை ஏற்க முடியாதென ஊடகவியலாளர் கைது

vv.jpgஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரம்பகாலங்களில் நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் பணியாற்றியுள்ளதுடன்,  தேசம்நெற் இணையத்தளத்திலும் நஜிமிலாஹி எனும் பெயரில் இவர் நேரடியாக எழுதி வந்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீமை கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாளஅட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் எஸ்.எம்.    நஜீமை ஒப்படைத்தனர். 

பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர். ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப்பிரயோகங்களை உபயோகித்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டையை இராணுவத்தினர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பது புரியாத விடயமாகவே இருக்கின்றது. இச்சம்பவத்தைப் பார்க்குமிடத்து ஊடக அடையாள அட்டை என்பது இலங்கையைப் பொறுத்த மட்டில் அர்த்தமற்றதொன்றாகவே எண்ணத் தோன்றுகின்றது.  

திமுக கூட்டணி கட்சிகள் – பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி

karunanithi.jpgதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதில் ஏதாவது புதிய கட்சி (பாமக) சேருமானால் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றார். 2 நாட்களில் தொகுதிப் பங்கீட்டையும் அறிவிப்போம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாமக, தேமுதிக ஆகியவற்றின் இழுத்தடிப்பு காரணமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக ஒரு மாதிரியாக தனது நிலை குறித்து சொல்லி வைத்துள்ளது. பாமக கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் நேற்று திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவரம் …

திமுக,
காங்கிரஸ்,
விடுதலைச் சிறுத்தைகள்,
இந்திய யூனியன்
முஸ்லீம் லீக்,
மனித நேயக் கட்சி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். புதிய கட்சிகள் கூட்டணியில் சேருமானால் அப்போது அதையும் தெரிவிப்போம். தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் என்னை வந்து சந்தித்தபோது, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம் என்றார் கருணாநிதி.

வேறு கட்சிகள் சேருமானால் அதை அறிவிப்போம் என்று முதல்வர் கூறியுள்ளது பாமகவையே குறிப்பதாக தெரிகிறது. 26ம் தேதி பாமக திமுக அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அன்றுதான் பாமக செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதாக நம்பப்படுகிறது.

ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஈபிடிபியில் இணைவு

EPDP_EPRLFவவுனியா மன்னார் பகுதிகளில் உள்ள ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் கடந்த ஞாயிறு அன்று தம்முடன்; இணைந்து கொண்டதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த சென்ற வார இறுதியில் வவுனியா சென்றிருந்த போதே ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் ஈபிடிபி உடன் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈபிஆர்எல்எவ் கட்சியில் இருந்து பிரிந்த டக்ளஸ் தேவானந்த ஈபிடிபி கட்சியை உருவாக்கினார். இப்போது தாய்க் கட்சி உறுப்பினர்களே ஈபிடிபியில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர்.

EPDP_EPRLFசிறிது காலத்திற்கு முன்னர் ஈபிஆர்எல்எவ் – ஈபிடிபி கட்சிகளிடையே முறுகல் நிலையொன்று இருந்து வந்தது. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எப் – புளொட் – கூட்டணி ஆகியவை உருவாக்கிய முக்கூட்டணயில் ஈபிடிபி இருக்கவில்லை. இந்த முக்கூட்டணி பாரிஸில் நடத்திய கூட்டத்திலும் ஈபிடிபி க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வமைப்புகள் அனைத்துமே அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் தமக்கிடையே முட்டி மோதிக் கொள்வதும் கூட்டணி அமைப்பதும் பின்னர் கோபிப்பதும் இயல்பான அரசியலாகி விட்டது.

இதற்கிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் யுத்த முனையில் இருந்து மீண்ட மக்கள் கௌரவமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் மார்ச் 20ல் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக அரசுக்கு ஆதரவான ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பது இதுவே முதற்தடவையாகும். இன்னும் சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் மதில் மேல் பூனைகளாக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிரெலோ என்ற பிரிவினரும் ஈபிடிபியுடன் நெருக்கமான உறவைக் கொண்டு உள்ளனர். வடக்கில் ஒரு புறம் மக்கள் மரணப் போராட்டத்தில் நிற்க மறுபுறம் தேர்தல் கூட்டுக்களும் செயற்பாடுகளும் அதற்கான வேலைகளும் தீவிரமாகி உள்ளன.

மட்டக்குளி வீட்டிலிருந்து 280 கிலோ எடையுள்ள சீ-4 வெடிமருந்து மீட்பு – கொழும்பில் பாரிய தாக்குதலை நடத்தத் திட்டம்?

ranjeth-gunasekara.jpgமட்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 280 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சீ-4 ரக வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். கொழும்பில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் புலிகள் இந்த வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வீடொன்றில் மறைத்து வைத்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இதனை மீட்டெடுத்துள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மட்டக்குளி பிரதேசத்திலிருந்து முஸ்லிம் நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி சேர்ச் வீதியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

சீ-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து 280 கிலோ 115 கிராம், கிரனைட் லோன்சர் குண்டுகள் – 25, 82 ரக கைக்குண்டுகள் – 30, வெடிக்க வைக்கும் கருவிகள் – 05, ரிமோட் கொண்ட்ரோல் – 2, ரி – 56 ரக துப்பாக்கிகள், ரி – 56 துப்பாக்கிகளின் உதிரிப் பாகங்கள் – 23, ரி – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள் – 693 மற்றும் பெருந் தொகையான வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

மட்டக்குளி சேர்ச் வீதியில் உள்ள வீட்டுக்கு இப் பெருந்தொகையான வெடி மருந்து வகைகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன; இதனைப் பயன்படுத்தி எங்கு தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பன தொடர்பான விசாரணைகளை பொலிஸார் பல கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தரும், அவருடன் தொடர்புடைய சந்தேக நபரும் தொடர்ந்து விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, விசாரணைகளின் போது மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகக் கூடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வன்னியில் படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் சிறியதொரு பிரதேசத்திற்கு முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் தென் பகுதியில் பாரிய தாக்குதல்களை நடத்தவோ, இனங்களுக்கு இடையில் பதற்றங்களை மேற்கொள்ளவோ புலிகள் முயற்சிக்கின்றனர்.

உரிய நேரத்தில் படையினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் கிடைக்கப் பெற்றமை மூலம் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமையும் பெருந்தொகையான வெடிமருந்துகளை மீட்டெடுத்தமையும் பாரிய அழிவுகளிலிருந்து பாதுகாக்க முடிந்துள்ளதாக எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை; சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ குழு ஆய்வு

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர் குழு நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்த பின் மாத்தறை பெரியாஸ்பத்திரிக்கு சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பான தொழில் நுட்ப, முகாமைத்துவ மற்றும் நிர்வாக ரீதியான விடயங்கள் அடங்கலாக சகல விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி பக்கச் சார்பற்ற சுயாதீனமான விசாரணைகளை நடத்துமாறு உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் இறந்ததோடு பலர் நோய்வாய்ப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைச்சரின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர்களான மாதவ் ராம், ஸ்ரீபன் குவிசர்ட் ஆகியோர் நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தனர்.

இவர்கள் நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அமைச்சில் சந்தித்தனர். ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின் மாணவி ஒருவர் இறந்ததோடு 27 பேர் நோய்வாய்ப்பட்டது தொடர்பாக அமைச்சர் இங்கு விளக்கியுள்ளார். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏதும் தொழில் நுட்ப, முகாமைத்துவ அல்லது நிர்வாக ரீதியான ஏதும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என ஆராயுமாறும் அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் கோரியுள்ளார்.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பு மருந்தில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்தும் கவனம் செலுத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலிகள் சகல பொதுமக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

khegeliya_rampukhala.jpgமுன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

புலிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்க வேண்டுமாயின் புலிகள் தங்களின் பிடியிலுள்ள சகல பொது மக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப. நடேசன் லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருந்த பேட்டி தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றோ சரணடைய வேண்டும் என்றோ இம்முறை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஏனெனில் அதைப் பற்றி எமக்கு கவலையில்லை.

நாம் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று எமக்குத் தெரியும் நாம் பின்னர் அதனை பார்த்துக்கொள்வோம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்.குடாவுக்கு 500 டாக்டர்கள்

nimal-sri-pala.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவத் துறையை மேம்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென ஜப்பானிய அரசாங்கம் மேலும் 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சுகாதார தேவைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களில் 500 பேரை கிழக்கிற்கு அனுப்பியுள்ளதுடன் தாதியர் அறுநூறு பேரையும் அம்மாகாணங்களுக்கு சேவைக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்: வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவைகளில் எதுவித உண்மையுமில்லை. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவமளித்து வருவதுடன் அங்குள்ள சகல மருத்துவமனைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று வடக்கிலும் சகல மருத்துவ மனைகளையும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பாதிக்கப்படுவோரின் நலன் கருதி அநுராதபுரம் பொது வைத்தியசாலை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு சத்திரசிகிச்சைக்கான விசேட பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

யாழ்தேவி கருத்திட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒருமாத சம்பளம்

mahinda-rajapaksha.jpg
யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் கருத்திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார்.

மேற்படி கருத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி தமது ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் கையளித்தார்.

அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை மேற்படி திட்டத்திற்காக வழங்கினர். பிரபல தொழிலதிபர்கள், ரவீந்ர ரந்தெனிய, மாலினி பொன்சேகா போன்ற திரைப்படக் கலைஞர்களும் தமது அன்பளிப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப் பாலமாகத் திகழும் இக் கருத்திட்டத்திற்குச் சகலரும் மனமுவந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

யாழ். குடாவுக்கு ஏ-9 வீதியூடாக 300 மெ.தொ உணவுப் பொருட்கள் நாளை மறுதினம் 20 லொறிகளில் அனுப்பிவைக்க ஏற்பாடு

sb_diwarathnass.jpgயாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி முன்னூறு மெற்றிக் தொன் பொருட்களுடன் நாளை மறுதினம் 26ம் திகதி கொழும்பிலிருந்து பயணமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்று தெரிவித்தார்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருபது லொறிகளில் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 8ம் திகதி முதலாவது வாகனத் தொடரணி 350 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன் வடபகுதி விளை பொருட்களும் தென்பகுதிக்கு எடுத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் யாழ். குடா நாட்டுக்குப் புறப்படும் இரண்டாவது வாகனத் தொடரணியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பழவகைகள், மலிகைச்சாமான்கள், மென்பானங்கள் அடங்களான பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இராணுவத்தினரின் கண்காணிப்புடன் வெளிசரை களஞ்சியத்தில் அவை லொறிகளில் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழி களஞ்சியத்தில் யாழ். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்புவதற்காக திரட்டப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் கூறினார். இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ எடையுள்ள மீன, இரால், கிழங்கு அடங்களான யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துவரப்பட உள்ளன.

ஏ-9 பாதையினூடாக தமது உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டதன் மூலம் யாழ். மக்கள் கூடுதல் வருமானம் பெற்று வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார். இதற்கு முன் ஒரு கிலோ கிழங்கு 30 ரூபாவுக்கே விற்க முடிந்ததோடு தற்பொழுது 50 ரூபாவுக்கு விற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலாவது வாகன தொடரணி கடந்த 8ம் திகதி ஏ-9 ஊடாக யாழ் சென்றது. இதன் போது 350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதோடு 10 லொறிகளில் யாழ். மக்களின் உற்பத்திகள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டன.

இதேவேளை அரிசி, மா என்பன தொடர்ந்தும் கப்பல் மூலமே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் பெருமளவு அத்தியாவசியப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் களங்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். அங்கு உணவுப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் சாதாரண விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 3 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை மா என்பன கையிருப்பில் உள்ளதாகவும் 2 வாரத்துக்கு போதிய பெற்றோல் இருப்பதாகவும் கூறினார்.