யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி முன்னூறு மெற்றிக் தொன் பொருட்களுடன் நாளை மறுதினம் 26ம் திகதி கொழும்பிலிருந்து பயணமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்று தெரிவித்தார்.
இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருபது லொறிகளில் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 8ம் திகதி முதலாவது வாகனத் தொடரணி 350 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன் வடபகுதி விளை பொருட்களும் தென்பகுதிக்கு எடுத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் யாழ். குடா நாட்டுக்குப் புறப்படும் இரண்டாவது வாகனத் தொடரணியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பழவகைகள், மலிகைச்சாமான்கள், மென்பானங்கள் அடங்களான பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இராணுவத்தினரின் கண்காணிப்புடன் வெளிசரை களஞ்சியத்தில் அவை லொறிகளில் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழி களஞ்சியத்தில் யாழ். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்புவதற்காக திரட்டப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் கூறினார். இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ எடையுள்ள மீன, இரால், கிழங்கு அடங்களான யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துவரப்பட உள்ளன.
ஏ-9 பாதையினூடாக தமது உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டதன் மூலம் யாழ். மக்கள் கூடுதல் வருமானம் பெற்று வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார். இதற்கு முன் ஒரு கிலோ கிழங்கு 30 ரூபாவுக்கே விற்க முடிந்ததோடு தற்பொழுது 50 ரூபாவுக்கு விற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாவது வாகன தொடரணி கடந்த 8ம் திகதி ஏ-9 ஊடாக யாழ் சென்றது. இதன் போது 350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதோடு 10 லொறிகளில் யாழ். மக்களின் உற்பத்திகள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டன.
இதேவேளை அரிசி, மா என்பன தொடர்ந்தும் கப்பல் மூலமே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் பெருமளவு அத்தியாவசியப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் களங்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். அங்கு உணவுப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் சாதாரண விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 3 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை மா என்பன கையிருப்பில் உள்ளதாகவும் 2 வாரத்துக்கு போதிய பெற்றோல் இருப்பதாகவும் கூறினார்.