பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்புக்காக மூவாயிரம் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகருக்கு வருவோரை மோசடிக்காரர்களிடமிருந்தும், கொள்ளையர்களிடம் இருந்தும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாதாரண உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ரோந்துச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் முக்கிய இடங்களில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரில் போக்குவரத்து நெறிசல்களை சீர்செய்ய மேலதிகமாக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.