ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர் குழு நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்த பின் மாத்தறை பெரியாஸ்பத்திரிக்கு சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பான தொழில் நுட்ப, முகாமைத்துவ மற்றும் நிர்வாக ரீதியான விடயங்கள் அடங்கலாக சகல விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி பக்கச் சார்பற்ற சுயாதீனமான விசாரணைகளை நடத்துமாறு உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் அமைச்சர் கோரியுள்ளார்.
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் இறந்ததோடு பலர் நோய்வாய்ப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைச்சரின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர்களான மாதவ் ராம், ஸ்ரீபன் குவிசர்ட் ஆகியோர் நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தனர்.
இவர்கள் நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அமைச்சில் சந்தித்தனர். ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின் மாணவி ஒருவர் இறந்ததோடு 27 பேர் நோய்வாய்ப்பட்டது தொடர்பாக அமைச்சர் இங்கு விளக்கியுள்ளார். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏதும் தொழில் நுட்ப, முகாமைத்துவ அல்லது நிர்வாக ரீதியான ஏதும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என ஆராயுமாறும் அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் கோரியுள்ளார்.
மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பு மருந்தில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்தும் கவனம் செலுத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.