ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன மருந்துவ நிபுணர்கள் குழுவினர் தங்களது இடைக்கால அறிக்கையை நாளை 27ம் திகதி சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குக் கையளிக்கவுள்ளனர்.
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 22ம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இம்மருத்துவ நிபுணர்கள் மறுநாள் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் மாத்தறைக்கு நேரில் சென்று ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடந்த 19ம் திகதி மாத்தறை சென் தோமஸ் உயர் தர மகளிர் கல்லூரியின் 8ம் தர மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப உலக சுகாதார ஸ்தாபனம் இரு மருத்துவ நிபுணர்களை கொழும்புக்கு அனுப்பிவைத்தது.
இவர்கள் மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமைக்கு உள்ளான மாணவிகள் கற்கும் பாடசாலைக்கும், மாணவி களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரணைகளை நடத்தினர். குறித்த தடுப்பு மருந்து தொடர்பாகவும் பரிசோதனைகளை நடாத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளையும், பரிசோதனையையும் முடித்துக் கொண்டு இக்குழுவினர் நேற்று கொழும்பு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.