சிகிரியாவில் குளவி கொட்டி பாதிக்கப்பட்ட 38 பேர் சிகிச்சைக்கென சிகிரிய கிராமிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி பொறுப்பாளர் டாக்டர் டப்ளியு. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் 18 பேரும், விமானப் படையினர் ஐவரும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரும், ஒரு பொலிஸாரும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:- சிகிரிய குன்றில் குளவி கொட்டி 38 பேர் சிகிச்சை பெறவந்தனர். இவர்களில் பத்து பேர் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.
குளவி கொட்டிய மாணவர்களைக் காப்பாற்றச் சென்ற ஐந்து விமானப் படையினரும், ஆரம்ப சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அத்தோடு ஒரு உல்லாச பயணியும் சிகிச்சை பெற்று வெளியேறி இருக்கிறார்.
இதேநேரம் ராஜாங்கணை யாயட்ட பாடசாலை மாணவர்கள் 18 பேரும், ஒரு உல்லாசப் பயணியும், உல்லாச ஹோட்டலொன்றின் இரு ஊழியர்களும், உல்லாச பயணிகளுக்கு வழிகாட்டும் நபர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.