பிலிபித் தொகுதியில் தான் பேசியது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள மத துவேஷ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய வருண் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டை அணுக பாஜக முடிவு செய்துள்ளது.
பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாக பேசியிருந்தார் வருண் காந்தி. இதுதொடர்பான சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம், வருண் காந்தி, பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில், வருண் காந்தி பிலிபித் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி மனு தாக்கல் செய்தார். மேலும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரைக் கைது செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளதால், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த முன்ஜாமீன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் வருண் காந்தி கைது செய்யப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளன. எனவே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.