இலங் கையின் இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக்காண்பதற்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. பிராந்திய அபிலாஷைகளில் உணர்வு பூர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இலங்கையின் இனநெருக்கடிக்கு சகல சமூகங்களினதும், விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை உத்தரவாதப்படுத்தும் கௌரவமான தீர்வை கட்சி வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்வையே காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையானது சுயாதீனமானது என்றும் அதேசமயம், பொறுமையுடன் ஆனால் வலுவான இராஜதந்திரத்தை மும்பைத் தாக்குதல் விவகாரத்தில் கையாண்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
இதேவேளை, இலங்கை உட்பட இந்தியாவின் அயல் நாடுகள் ஸ்திரமின்றி இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய இந்தியப்பிரமர் இந்தியாவை சூழவுள்ள சவால்களை நான் பார்த்தால், “ஸ்திரமின்மையை காண்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ளது. நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இடம்பெறுபவை தெற்காசியாவின் எதிர்காலம் குறித்த கவலைக்கு காரணமாக உள்ளன என்றும் கூறினார்.
நாடு பலமானதாகவும் இலக்குடைய அரசாங்கத்தையும் கொண்டிருந்தால் ?தெற்காசியாவை சமத்துவம் மிக்கதாகவும் அதிக சுபிட்சமுடையதாகவும் மீளக்கட்டியெழுப்புவதற்கான ஊக்குவிப்பு சக்தியாக இந்தியாவால் விளங்கமுடியும்’ என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இனவாத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதாகவும் அவர் சாடியுள்ளதுடன், பாரதியஜனதாவும் இடதுசாரிகளும் எதிர்மறையான மனப்பாங்குடன் இருப்பதாகவும் இது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லாது என்றும் கூறியுள்ளார்.