தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கொழும்பு பெரியாஸ்பத்திரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேயசேகரவின் உடல் நிலை தேறிவருவதையடுத்து அவர் கட்டணம் செலுத்தி சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீதி மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட ஆபத்தான நிலையில் தீவிர சத்திரசிகிச்சை கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க நேற்று (25) தெரிவித்தார்.
தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகர பின்னர் நரம்பியல் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்பொழுது அமைச்சர் சுயமாக எழுந்து உட்காருவதோடு உதவியாளரின் உதவியுடன் நடந்து வருவதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவு பணிப்பாளர் பி. ஆரியவர்தன தெரிவித்தார். அவரின் உடல் நிலை தேரிவருவதையடுத்தே அவரை கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்டுக்கு மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நீதி, நீதி மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட கடந்த இரு தினங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஹெக்டர் வீரசிங்க கூறினார். அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறியவருகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன