Multiple Page/Post

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12இல் ஆரம்பம்

150909students1.jpgஇவ் வருடத் துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
 
இந்தப் பரீட்சை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதுடன் இதற்காக சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களை நிருவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பரீடசார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை எழுதவென வவுனியா நலன்புரி மத்திய நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட பரீட்சார்த்திகள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறினால் அங்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்க கவனம் செலுத்தப்படும் என்றும் வடக்கின் பரீட்சார்த்திகளுக்கு சிக்கல் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற வகைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது

101009displacedidps.gifவவுனி யாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற முகாமைத்துவம் குறித்து உறுதியான திட்டம் உண்டு என்றும், அத்திட்டம் நேர்த்தியாகவும் திறமையாகவும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது இடம்பெறும் தனது சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது என்று கூறினார்

புலிகளின் இரகசிய ஆவணங்கள் கடற்படையினரால் மீட்பு!

புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான மிகவும் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம்  அறிவி;த்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தேடுதல் நடத்திய படையினர் கதிரவெளிப் பிரதேசத்திலுள்ள இலங்கத்துறை என்ற இடத்தில் நிலத்தின்கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த முக்கிய ஆவணங்களை மீட்டுள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் 25 பொதிகளில் இந்த ஆவணங்கள் பத்திரப்படுத்தப்படிருந்தன. இவை புலிகளின் மிகவும் முக்கியமான ஆவணங்கள் என்பது ஆரம்ப ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் மேலும் அறிவித்துள்ளது. 

உலக குத்துச்சண்டை போட்டி: அப்போஸ் அடோ வெற்றி

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். 15 வது உலக ஆண்கள் குத்துச்சண்டை போட்டி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வருகிறது.

இதன் மிடில் வெயிட் (75 கிலோ) பிரிவில் அரையிறுதியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்போஸ் அடோவ்வை எதிர்கொண்டார்.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் விஜேந்தர்சிங் 10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார்.

ஆனால் 2 வது சுற்றில் நிலைமை தலைகீழாக மாறியது. லைட் ஹெவிவெயிட் முன்னாள் உலக சம்பியனான அப்போஸ் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டார்.

அவர் 2 வது சுற்றில் 5-0 என்ற புள்ளி கணக்கில் தனதாக்கினார். 2 வது சுற்றில் விஜேந்தரால் ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை. 3 வது, 4 வது மற்றும் கடைசி சுற்றில் இருவரும் சம தாக்குதலில் ஈடுபட்டனர். இருவரும் கடைசி இரண்டு சுற்றுக்களில் 2-2 என்ற கணக்கில் சமபுள்ளிகளை பெற்றனர். முடிவில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் 3-7 என்ற புள்ளி கணக்கில் அப்போஸ் அடோவிடம் தோல்வி கண்டார்.

23 வயதான விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டாலும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதன் மூலம் உலக குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர்சிங் வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

”இலங்கை முகாம்களில் மக்கள் தடுப்புக்காவல் நிலையில்…”- நவி பிள்ளை

150909navifora.jpgஇலங் கையில் அண்மைய யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெயர நேர்ந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு சூழலில் இருந்துவருகிறார்கள் என்று ஐ.நா.மன்ற மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதிம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் நவநீதம் பிள்ளை ஆற்றவுள்ள உரை என ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணிக்கையில் மக்கள் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த முகாம்களில் உதவியமைப்புகள் சென்று பணியாற்றுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அங்கே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன என்றும் நவநீதம் பிள்ளையின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டிகள்

1509fiba-news203a.jpgஆசிய அளவில் மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் இம்மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 24 ஆம் திகதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இவ்வகையான ஆசியக் கூடைப்பந்து போட்டிகள், தெற்காசியாவிலேயே முதல் முறையாக இப்போது இந்தியாவில் தான் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா இலங்கை உட்பட 12 அணிகள் பங்கு பெறுகின்றன. சீனா, ஜப்பான் உட்பட ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.

பங்கு பெறும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன என்று போட்டிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தும் குழுவின் இணைச் செயலரான ரகோத்தமன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா, இலங்கை போன்ற அணிகள் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கூறும் அவர், இப்படியான நாடுகளுக்கு இவ்வகையான போட்டிகள் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்றும் கருத்து வெளியிடுகிறார்.

ஜப்பான் மற்றும் சீன நாட்டு வீரர்களின் விளையாட்டு திறனும், மன உறுதியும் இந்திய மற்றும் இலங்கை வீரர்களை விட உயர்ந்து காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

கிராமப்புறங்களில் இருந்து இளம் வயதில் வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தாலே இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டு முன்னேற்றம் அடைந்து சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன.

உ/த பரீட்சை வினாத்தாள் திருத்தும் 2ம் கட்டம் ஆரம்பம் – ஆறாயிரம் பேர் பணியில்

150909students.jpgக. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்ப மானதுடன் ஆறாயிரம் பேர் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 25 ஆம் திகதி வரை இவ்வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடருமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய 15 நகரங்களிலுள்ள 20 நிலையங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதற் கென ஆறாயிரம் பேரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், வினாத்தாள் திருத்தும் முதலாம் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் 30 ஆம் ஆரம்பமாகி நேற்று முன்தினம் 13 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத் தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் தாமதமடைந்தன. இதற்கு சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்த அவர், இம்முறை சகல ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் இம்முறை பரீட்சை முடிவுகளை குறிப்பிட்ட தினத்தில் வெளியிட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: கிலிஸ்டர்ஸ் சாம்பியன்

150909kilista.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை லிஸ்டர்ஸ் சம்பியன் பட்டம் பெற்றார். அதன் விபரம் வருமாறு:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்றுக் காலை நடந்தது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கிம்கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), 9ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதினார்கள்.

கிலிஸ்டர்சின் தாக்குதல் ஆட்டத்துக்கு கரோலினால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. கிலிஸ்டர்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சம்பியன் பட்டம் பெற்றார்.

அவர் கைப்பற்றிய 2வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்று இருந்தார்.

வீதி விபத்தால் படுகாயமடையும் ஒருவருக்கு…ரூ. 10 இலட்சம் முதல் ஒரு கோடி வரை அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைச் செலவு

திடீர் வீதி விபத்து காரணமாக வருடா வருடம் இலங்கையில் 2000-3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானோர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம் திடீர் வீதி விபத்தினால் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வருடாந்தம் காயமடைவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

திடீர் வீதி விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. வீதி விபத்துகளினால் காயமடைகின்ற ஒருவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரை செலவாகுவதாக அரசாங்க சுகாதாரத் துறை யினால் கணக்கிடப்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் சாரதிகளின் கவனயீனத்தால் காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செல வாகின்ற செலவுத் தொகையை சாரதிகளிடமோ,  அல்லது வாகன உரிமையாளர்களிடமோ இருந்து அறவிடுவது குறித்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை கவனம் செலுத்தியுள்ளது.

இது விடயமாக சட்ட மா அதிபருடன் ஆலோசனை நடத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

வவுனியாவில் இருந்து திரும்பிய அகதிகள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் – அமைச்சர் முரளிதரன்

140909karuna.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டு, இதுவரை விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இரு நாட்களுக்குள் விடுதலை செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில இடம்பெயர்ந்த குடும்பங்கள், விடுவிக்கப்படாமல் மட்டக்களப்பில் இடைத்தரிப்ப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல அம்பாறை மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில குடும்பங்கள் முதலில் விடுவிக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முரளிதரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சில பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்காகவே பாதுகாப்பு தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், அவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுனர் உறுதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.