திடீர் வீதி விபத்து காரணமாக வருடா வருடம் இலங்கையில் 2000-3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானோர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம் திடீர் வீதி விபத்தினால் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வருடாந்தம் காயமடைவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
திடீர் வீதி விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. வீதி விபத்துகளினால் காயமடைகின்ற ஒருவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரை செலவாகுவதாக அரசாங்க சுகாதாரத் துறை யினால் கணக்கிடப்பட்டிருக்கின்றது.
இதன் காரணத்தினால் சாரதிகளின் கவனயீனத்தால் காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செல வாகின்ற செலவுத் தொகையை சாரதிகளிடமோ, அல்லது வாகன உரிமையாளர்களிடமோ இருந்து அறவிடுவது குறித்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை கவனம் செலுத்தியுள்ளது.
இது விடயமாக சட்ட மா அதிபருடன் ஆலோசனை நடத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார்.