வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டு, இதுவரை விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இரு நாட்களுக்குள் விடுதலை செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில இடம்பெயர்ந்த குடும்பங்கள், விடுவிக்கப்படாமல் மட்டக்களப்பில் இடைத்தரிப்ப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல அம்பாறை மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில குடும்பங்கள் முதலில் விடுவிக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முரளிதரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சில பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்காகவே பாதுகாப்பு தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், அவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுனர் உறுதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.